சிறப்பு பெண் எஸ்.ஐ விபத்தில் உயிரிழப்பு: அருப்புக்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி

By இ.மணிகண்டன்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி சிறப்பு பெண் எஸ்.ஐ. ஒருவர் உயிரிழந்தார். 21 குண்டுகள் முழங்க அவருக்கு போலீஸார் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார். அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அங்கயர்கன்னி (39). அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தார். கடந்த 17-ம் தேதி கோவில்பட்டியில் உள்ள உறவினர்களை பார்த்து விட்டு அருப்புக்கோட்டையை நோக்கி பைக்கில் வந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறப்பு எஸ்.ஐ. அங்கயர்கன்னி நேற்று மாலை உயிரிழந்தார். அதையடுத்து, உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. அயங்கயர்கன்னியின் இறுதி அஞ்சலி அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியில் இன்று நடைபெற்றது. அப்போது, எஸ்.பி.கண்ணன் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், 21 குண்டுகள் முழங்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து, சிறப்பு எஸ்.ஐ. அங்கயற்கன்னி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE