குடோன்களில் சட்ட விரோதமாக பட்டாசுகளை இருப்பு வைக்கக் கூடாது: விருதுநகரில் எச்சரிக்கை

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிற வகையான குடோன்களில், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக, கள்ளத்தனமாக பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக சிவகாசி, சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டங்களில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிற வகையான குடோன்களில், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக, கள்ளத்தனமாக பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன. பட்டாசு மற்றும் வெடிபொருள்களை உரிய உரிமமோ அல்லது அனுமதியோ இல்லாமல் பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்காக இருப்பு வைத்து, கொண்டு செல்வது வெடிபொருள் சட்ட விதிகள் 2008-ன் படி குற்றம் ஆகும்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டிரான்ஸ்ட்போர்ட் நிறுவனங்கள் மற்றும் பிற வகையான குடோன்களில் கள்ளத்தனமாக பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் ஏதேனும், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்திட காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கும், அதேபோல் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்கள் மற்றும் பிற அனுமதியில்லாத வாகனங்களில் வெளியூர்களுக்கு பட்டாசுகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதியோ, உரிமமோ எதுமில்லாமல் பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்களை தற்காலிகமாக இருப்பு வைப்பதும், கொண்டு செல்வதும், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணானது. இச்செயல்களில் ஈடுபடும் டிரான்ஸ்போர்ட் மற்றும் பிற வகையான குடோன்களால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் எனக்கருதி, பாரதீய நாகரீக் சுரக்சா சந்நிகா (BNSS)-152 ன்படி சட்ட ரீதியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE