தனித்துப் போட்டி... இந்தியா கூட்டணியில் இன்னொரு கட்சியும் அறிவிப்பு!

By காமதேனு

இந்தியா கூட்டணியில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் அந்தக் கூட்டணியில் சிக்கல் மேலும் தொடர்கிறது.

ஓமர் அப்துல்லா

26 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாடு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொகுதிகள் ஒதுக்கிட்டு தொடர்ந்து பிரச்சினை நிலவி வந்தது. இந்த நிலையில் கூட்டணியின் துணைத் தலைவரும், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகனுமாகிய ஒமர் அப்துல்லா, 'காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். ஜம்முவில் உள்ள இரண்டு இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன' என்று தன்னிச்சையாக அறிவித்தார்.

இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியும் தற்போது தனித்துப் போட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியே இல்லை; அதை, எங்கும் காண முடியவில்லை என ஒமர் அப்துல்லா பேசியது, எங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு என் கட்சித் தொண்டர்களை தேசிய மாநாடு கட்சியை ஆதரிக்கச் சொல்வேன்? ஆகவே, காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இந்தியா கூட்டணி

அதற்கான வேட்பாளர்கள் குறித்து, கட்சியின் உயர்மட்டக்குழு ஆலோசித்து விரைவில் இறுதி செய்யும். எங்களின் இந்த நிலைக்கு, தேசிய மாநாடு கட்சியே காரணம்" என்று அவர் கூறினார். ஏற்கெனவே பஞ்சாப், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிடும் நிலையில் தற்போது காஷ்மீரிலும் தனித்து போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியின் ஒற்றுமை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE