குடிசைமாற்று வாரியம் புதிய குடியிருப்புகளை கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

By பெ.ஜேம்ஸ் குமார்

மேலக்கோட்டையூர்: மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் புதியதாக 600-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படவுள்ளது. இதற்காக 15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை முதல் செயற்பொறியாளர் குமரேசன், உதவி பொறியாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் இடத்தை அளவீடு செய்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மேலக்கோட்டையூர் ஊராட்சி உறுப்பினர்கள் குருநாதன், மஞ்சு மகேந்திரன், பிருந்தா சந்திரன், சரவணன், பூபாலன் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை முதல் மேலக்கோட்டையூர் பகுதியில் காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் மற்றும் ராஜீவ் காந்தி நகர் குடியிருப்பு மக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் இணைந்து இந்த திட்டத்தினை கைவிட வேண்டி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், ''ஏற்கெனவே காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் முறையான கழிவுநீர் அமைப்பு இல்லாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். இந்நிலையில் மேலும் கூடுதலாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அமைந்தால் மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தனர்.

இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துவிட்டு பின்பு இந்த திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்ததுடன், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரலெழுப்பினர்.

பின்னர், அடுத்த வாரத்தில் ஒரு நாள் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை மூலம் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி வார்டு உறுப்பினர் குருநாதன் கூறியதாவது: ''மேலக்கோட்டையூர் ஊராட்சி பகுதியில் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அருகில் காவலர் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவுநீர் முற்றிலும் நீர்நிலைகள் கலக்கிறது. இதனால் நிலத்தடிநீர் கெட்டுள்ளது. இதே போல் புதிதாக வீடுகள் வந்தால் இதே நிலை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவமனை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். ஏற்கெனவே ஊராட்சியில் இருந்த சுமார் 700 ஏக்கர் நிலத்தை பல்வேறு விளையாட்டு பல்கலைகழம், மத்திய அரசு நிறுவனம், காவலர் குடியிருப்பு, காவலர் பள்ளி என தேவைகளுக்காக அரசு கையகப்படுத்தி விட்டது. தற்போது உள்ள பொது மக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தாமல். மேலும் மேலும் குடியிருப்புகள் கட்டப்படுவது வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு திட்டத்தை கைவிட வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE