‘இது என்ன உலக மகா உருட்டாக இருக்கிறது’... பிரதமர் மோடியின் பேட்டியை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்!

By சந்திரசேகர்

தனியார் டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்ரோலாகி வரும் நிலையில், "அமலாக்கத்துறைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிரதமர் மோடி உருட்டு உருட்டியிருக்கிறார்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.

பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

பின்னர் பேசிய அவர், "சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு மோடி அளித்த பேட்டியில், அமலாக்கத்துறை கைதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிரதமர் மோடி ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார். அந்த உருட்டில் பேட்டி எடுத்தவர்களே ஆடிப்போயினர். அந்த பேட்டியைப் பார்த்தவர்களுக்கு இது நியூஸ் டைமா அல்லது காமெடி டைமா என்று குழம்பிவிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும் போதே, மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3 கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பேரிடர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டு, வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுத்தோம் என்று கூறுவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அதுதான் இது என்ற வாழைப்பழ காமெடியை நினைவூட்டுகிறது.

சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார். மிக்ஜாம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இது மாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை மோடி அமைச்சராக வைத்திருக்கிறார்

ஆளுங்கட்சியாக இருக்கும் போது, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பாஜகவை எதிர்ப்பதாக பேசுவார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு எதிர்க்கட்சியான பிறகு, எதிர்க்கட்சி ஏன் பாஜக அரசை எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுவார். ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் என நாடகம் நடத்த, கூவத்தூர் கவனிப்புகளால், தரையில் ஊர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். பிறகு ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு பரப்புரை செய்தார். பிறகு ஓ.பி.எஸ். உடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக பரப்புரை செய்தார். அடுத்ததாக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாட்டர் பாட்டில் மரியாதை அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். நேரடியாக பாஜக கூட்டணியில் சேர, எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக அந்த கூட்டணியில் இருக்கிறார். இவர்கள் அனைவருமே தமிழ்நாடு மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்", என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE