கும்பகோணம்: உலக வெறிநாய்க் கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: உலக வெறி நாய்க் கடி தடுப்பு தினத்தையொட்டி இன்று கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம் வட்டார பொதுசுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் என்.சங்கரன், வெறிநாய் போல் முகத்தில் முகமூடி அணிந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர், “90 சதவீத ரேபிஸ் நோய் நாய்க் கடியின் மூலமாகப் பரவுகிறது.

உலகத்தில் ஒவ்வொரு 9 நிமிடத்துக்கும் ஒருவர் ரேபிஸ் நோயால் உயிரிழக்கிறார். இதில் 10-க்கு 4 பேர் குழந்தைகளாவர். ரேபிஸ் நோய் 100 சதவீதப் உயிரிழப்பை உண்டாக்கும். ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் 100 சதவீதம் பாதிப்பைத் தடுக்க முடியும்.

இந்த நோய் நாய், பூனை, குரங்கு, ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகள் கடித்தாலும் ஏற்படலாம். இந்த நோய் 95 சதவீதம் வெறிநாய் கடியின் மூலமே ஏற்படுவதால் அதனை வெறி நாய்க்கடி நோய் என்கிறோம். காயங்களில் வெறி நாயின் எச்சில் பட்டாலே ரேபிஸ் நோய் தொற்ற ஏற்பட வாய்ப்புள்ளது.

காய்ச்சல், தலைவலி, தண்ணீரைக் கண்டாலே பயப்படும் சூழல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். நாய் மற்றும் விலங்குகள் கடித்தால் அதனால் உண்டாகும் காயத்தைக் குறைந்தது 15 நிமிடங்கள் சோப்புத் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். குழாயில் கொட்டுகின்ற தண்ணீரில் கழுவுவது நல்லது. கடித்த இடத்தில் மருந்து பூசுவதோ, தையல் போடுவதோ, கட்டுக் கட்டுவதோ கூடாது” என்றார். இது தொடர்பாக துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், கிராமிய பாடல்களைப் பாடியபடியும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE