கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போலீஸார் திடீர் சோதனை: ஏர்ஹாரன்கள் பறிமுதல்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை சிலர் பயன்படுத்துகின்றனர். இந்த சத்தம் அதிகமாக கேட்பதால் சாலையோரங்களில் செல்வோர் அச்சம் அடைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தன. அதன்பேரில் கோவை மாநகர வடக்கு பகுதி காவல் துணை ஆணையர் ஸ்டாலின், காட்டூர் சரக உதவி ஆணையர் கணேசன், போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் இணைந்து தனியார் பேருந்துகளில் இன்று (மே 25) அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் விதிமுறையை மீறி, பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பொருத்தியது தெரியவந்தது. 25 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்ட 25 தனியார் பேருந்துகளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்று கோவையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். அதோடு, ஓட்டுநர்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என்றும், பேருந்து இயக்கும்போது செல்போன் பயன்படுத்துகிறார்களா? என்றும் போலீஸார் சோதனை செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE