என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

By க. ரமேஷ்

கடலூர்: என்எல்சி இந்தியா நிர்வாகத்தைக் கண்டித்து நெய்வேலியில் என்எல்சி பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற வருகிறது.

நெய்வேலியில் என்எல்சி பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று காலை நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே அடையாள உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில பேரவை தலைவர் வீரமணி, பாட்டாளி தொழிற்சங்க தலைவர் குமாரசாமி, பேரவை பொருளாளர் சேகர், பாட்டாளி தொழிற்சங்க பொருளாளர் ஆறுமுகம் அலுவலக செயலாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி தொழிற்சங்க மாநில பேரவை பொதுச்செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் கோ.ஜெகன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''30 ஆண்டு காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம் வழங்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும். என்எல்சியில் கிடைக்கக்கூடிய லாபத் தொகையை பிஹார், ராஜஸ்தான் ஒடிசா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்து அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை என்எல்சி நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால், என்எல்சி நிறுவனம் உருவாக காரணமான தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. என்எல்சி நிர்வாகம் இந்தப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்றார்.

இன்கோசர்வ் தொழிலாளர்களாக உள்ள அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கின்ற அனைவரையும் இன்கோசர்வ் தொழிலாளர்களாக பணிமாற்றம் செய்யவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோசர்வ் மற்றும் ஹவுசிகோஸ் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்கோசர்வ் சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்களில் நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தரப்படுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும், 2023-24-ம் ஆண்டிற்கான போனஸ் தொகையை 20 சதவீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE