வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

By காமதேனு

கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, அங்குள்ள மக்களுடன் வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்தார்.

நடனம் ஆடும் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத் தலைவராக உள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, கோவை தொகுதியில் தனக்காக தீவிர பிரசாரத்தில் செய்து வருகிறார். தினந்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது பல்வேறு உறுதிமொழிகளை அளித்து வரும் அண்ணாமலை வாக்காளர்களுக்கு ஏற்ப கன்னட மொழியில் பேசுவது உள்ளிட்ட பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார். இந்த நிலையில் அவரை வரவேற்க நடந்த வள்ளி கும்மி நடனத்தில் அவரும் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார்.

தீவிர வாக்கு சேகரிப்பில் அண்ணாமலை

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் நேற்று மாலை அவர் தனக்காக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை வரவேற்க அங்கு வள்ளி கும்மி நடனம் நடந்தது. அந்த நடன குழுவினருடன் அண்ணாமலை இணைந்து சிறிது நேரம் வள்ளி கும்மி நடனம் ஆடினார். இதனால் அங்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் வடை சுட்டும், டீ போட்டும், கரும்புச்சாறு பிழிந்தும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அண்ணாமலை நடனமாடி வாக்கு சேகரித்தது பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE