சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஆண்டுதோறும் 6% உயர்த்தும் அரசின் உத்தரவை செயல்படுத்த அனுமதி: திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

By KU BUREAU

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி 6 சதவீதம்மட்டுமே உயரும். அது தொடர்பான அரசின் உத்தரவை செயல்படுத்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதி அளித்து நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய 63-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் சிவ.ராஜசேகரன், “மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும்மருத்துவர்களுக்கு, அந்த பணிக்காலத்தை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும். நிலைக்குழு உறுப்பினர் பதவிகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நிலைக்குழு தலைவர் (கணக்கு தனிக்கை) தனசேகர் பேசும்போது, “பல மண்டலங்களில் தூய்மைப்பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மாநகராட்சிதீவிர தூய்மைப் பணி மேற்கொள்கிறது. எனவே தனியார் நிறுவனம் முறையாகப் பணி செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பின்னர், இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார். தமிழக அரசு சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு, மே.30-ம் தேதியிட்ட அரசாணையில், “சொத்து வாடகைமதிப்பில் 6 சதவீதம் அல்லது மாநிலஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியின் 5 ஆண்டு சராசரி ஆகியவற்றில் எது அதிகமோ அதன் மதிப்பில் 2023-24 முதல் ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் -2023 அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தவிதிப்படி ஆண்டுதோறும் 6 சதவீதம்மட்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று கடந்த செப்.5-ம் தேதி நகராட்சி நிர்வாகத் துறை அரசாணைபிறப்பித்துள்ளது. இந்த விவரங்கள் நேற்று நடைபெற்ற மன்றக்கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. அதை மாநகராட்சியில் அமல் படுத்த அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என பலகவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். கூட்டணிக் கட்சிகளான விசிக,சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர்.

தனியார் மயான பூமிகளுக்கு உரிமை கட்டணம் மற்றும் அனுமதி வழிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மயான உரிமை கோர ஒரு சென்ட் பரப்புக்குரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் 975 இடங்களில் 7 ஆயிரத்து 166 இருக்கைகள் கொண்ட புதிய கழிப்பிடங்கள் ரூ.11.67 கோடியில் கட்டவும், சைதாப்பேட்டை மற்றும் அடையாரில் தலா ரூ.9 கோடியில், தலா70 படுக்கைகள் கொண்ட நகர்ப்புற சமுதாய மருத்துவமனைகள் கட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 291 அம்மா உணவகங்களை ரூ. 17 கோடியில் சீரமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பைகள்மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க விதிக்கப்படும் அபராதம் ரூ.500 இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தவும், அத்தகைய கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள், மாநகராட்சி தேர்வு செய்யும் இடங்களில் கழிவுகளைக் கொட்ட அனுமதிக்கும் நடைமுறைக்கும், தேனாம்பேட்டை மண்டலம் 110-வது வார்டில் காம்தார் நகர் பிரதான சாலைக்கு பிரபல திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பெயரைச் சூட்டவும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நேற்று மொத்தம் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE