பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்... மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்!

By காமதேனு

மயிலாடுதுறை நகரப் பகுதியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மக்கள் பதற்றம் அடைந்துள்ள நிலையில் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பன்றியை சிறுத்தை கடித்த இடத்தில் வனத்துறையினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டுத்தீ போல் இந்த செய்தி பரவியதால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது சிறுத்தையின் கால் தடம் உள்ளதை பொதுமக்கள் காண்பித்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு போலீஸார் தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் கால் தடத்தை ஆராய்ந்து அது சிறுத்தையின் கால் தடம் என்று உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய மயிலாடுதுறை மையப்பகுதியில் சிறுத்தை சுற்றி வருவது அனைவரிடமும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையால் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு அதைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் சிறுத்தை இன்று அதிகாலை வாய்க்காலில் இருந்த பன்றியை கடித்துள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. வனத்துறை அதிகாரிகள். தேடுதல் வேட்டையை துவங்கி உள்ளனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் சார்பில் ஒவ்வொரு வீதியிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை அருகில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE