108 வயது மூதாட்டி கோவை பாப்பம்மாள் காலமானார்: இயற்கை விவசாயத்துக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர்

By KU BUREAU

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக இவர் ஆற்றியசேவைகளைப் பாராட்டி மத்தியஅரசு 2021-ம் ஆண்டு ‘பத்ம’ விருதை வழங்கி கவுரவப்படுத்தியது. மேலும், கடந்தசில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் பாப்பம்மாளுக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டது.

தினமும் வயல்வெளிக்குச் சென்று இயற்கை விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மாள், கடந்த 3மாதங்களுக்கு முன்னர் வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். படுக்கையில் இருந்தபடியே உணவு, மருந்துகளை எடுத்து வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்நிலையி்ல், நேற்று இரவு அவர் காலமானார். கோவை பாப்பம்மாள் உயிரிழந்த தகவலையறிந்த ஊர் பெரியவர்கள், முக்கிய நிர்வாகிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வந்தார். கொடிசியா மைதானத்தில் பிரச்சாரக் கூட்டம் முடிந்ததும், மேடைக்கு பின்புறம் சென்று, மூதாட்டி பாப்பம்மாளிடம் பிரதமர் ஆசி பெற்றார். மேலும், பத்மஸ்ரீ விருது பெற்றதற்காக அவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பத்ம விருது பெற்றவுடன் சென்னையில் முதல்வர் ஸ்டாலினையும் பாப்பம்மாள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இயற்கை விவசாயியான இவர்,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகச் சென்று, அங்கு வரும் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் தொடர்பாக உரையாடியுள்ளார். மேலும், பொதுமக்கள், மாணவர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்த வகுப்புகளை எடுத்துள்ளார். ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றி வந்த அவர், பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவு சாப்பிடுமாறு அறிவுறுத்துவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE