மதுரை என்கவுன்ட்டர்: ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளைதுரை மீது வழக்கு - உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

By KU BUREAU

மதுரை: மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "எனது மகன் முருகன் (எ) கல்லு மண்டையனை 2010-ல்காவல் உதவி ஆணையராக இருந்தவெள்ளைதுரை, உதவி ஆய்வாளர் தென்னவன், தலைமைக் காவலர் கணேசன் ஆகியோர் சுட்டுக் கொன்றனர்.

எனவே, ஏடிஎஸ்பி-யாக பணியாற்றி ஓய்வுபெற்ற வெள்ளைதுரை மற்றும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுகுறி்த்த விசாரணையை சிபிஐ-க்குமாற்றி உத்தரவிட வேண்டும்" என்றுவலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழககாவல் துறை சட்டம்- ஒழுங்கை சிறப்பாகப் பாதுகாக்கும் அமைப்பாகும். ஆனால், தற்போது கொடூரமான குற்றவாளிகள் போலீஸாரைத் தாக்க முயல்வதும், அவர்களை போலீஸார் துப்பாக்கியால் சுடுவதும், அதில் குற்றவாளி இறப்பது அல்லது காயமடைவதும் வழக்கமாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குற்றவியல் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கை குறையும், என்கவுன்ட்டர்களில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீதுவழக்கு பதிவு செய்து, விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் போலீஸார் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து, நியாயமாக விசாரித்து, 6 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE