நெல்லை ராணி அண்ணா அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By KU BUREAU

திருநெல்வேலி: திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது.

இக்கல்லூரியில் முதலாமாண்டு சுழற்சி 1 மாணவிகளுக்கு உடனடியாக வகுப்புகளை திறக்க வேண்டும். மாணவிகளை தவறுதலாக தூண்டிவரும் இரு பேராசிரியர்கள் மீது கல்லூரி கல்வி இயக்குநரகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் நேற்று மாலையில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் இரவு 9 மணிக்கு மேலும் நீடித்தது.

இந்த போராட்டம் குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: "இக்கல்லூரியின் இரு பேராசிரியர்கள் மாணவிகளை தவறாக வழிகாட்டியதாலும், தற்கொலைக்கு தூண்டியதாலும் வணிகவியல் சுழற்சி 1 முதலாமாண்டு மாணவிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநரால் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஆனால் அம்மாணவிகள் குறித்த விவரங்களை பல்கலைகழகத்தில் பதிவு செய்ய வேண்டியிருப்பதாலும், கல்லூரியில் அகமதிப்பீட்டுத் தேர்வுகள் மற்றும் புதுமைப்பெண் திட்டத்துக்கான உரிய பதிவேற்ற வேலைகள் செய்ய வேண்டியிருப்பதாலும், பல்கலைக்கழக தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதாலும், வணிகவியல் சுழற்சி 1 மாணவிகளின் பெற்றோர்கள் வகுப்புகளை உடனே தொடங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி வகுப்புகளை உடனே தொடங்க வேண்டும்" இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE