தென்காசி: தென்காசி மாவட்டம் வடகரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய நிலங்களில் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.
வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் அவை விவசாய நிலங்களில் புகுந்து வருவதால் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யானைகளை நிரந்தரமான வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், அவை மீண்டும் விவசாய நிலங்களுக்குள் வராத வகையில் அகழிகள், சோலார் வேலிகள் அமைத்து தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வடகரை, வெள்ளக்கல்தேரி பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் பகுதிகள் ட்ரோன் மூலம் இன்று கண்காணித்து, யானைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இப்பணியை மாவட்ட வன அலுவலர் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இரவிலும் வனத்துறையினர் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
» ஓமன் எல்லையில் ஆழ்கடலில் தத்தளித்த 12 மீனவர்கள் மீட்பு - குமரி படகை கரை சேர்ப்பதில் சிக்கல்
» குமரி கனிம திட்ட எதிர்ப்பு போராட்டப் பின்னணியில் மத தலைவர்களா? - ராஜேஷ் குமார் எம்எல்ஏ விளக்கம்
வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வராதவாறு ஏற்கெனவே அமைக்கப்பட்ட அகழியை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலப்படுத்தும் பணி நடைபெற இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.