சிவகங்கையில் மழையால் பல ஏக்கரில் உளுந்து, நிலக்கடலை பாதிப்பு: விவசாயிகள் வேதனை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: கோடை மழையால் பூமி குளிர்ந்திருந்தாலும், சிவகங்கை அருகே பல ஏக்கரில் அறுவடைக்கு தயாராய் இருந்த உளுந்து, நிலக்கடலை பாதிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை அருகே சாத்தனி பகுதியில் பம்புசெட் மோட்டார் மூலம் 20 ஏக்கருக்கு மேல் உளுந்து, நிலக்கடலை பயிர்செய்யப்பட்டன. அவை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல ஏக்கரில் உளுந்து, நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது வயல்களை விட்டு தண்ணீர் வடிந்தாலும் ஈரப்பதத்தில் உளுந்து, நிலக்கடலை பருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனைப்பட்டுப் புலம்புகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி முத்து, “மாசி பட்டத்தில் 4 ஏக்கரில் வம்பன்- 8 ரக உளுந்தை பயிர் செய்தேன். ஒரு கிலோ ரூ.110 வீதம் வாங்கி ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதைத்தேன். உழவு, களையெடுப்பு, உரம் என ரூ.1.20 லட்சம் செலவழித்தேன். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் உளுந்து மீண்டும் முளைத்துவிட்டது.

4 ஏக்கரில் 2.5 டன் வரை உளுந்து கிடைக்க வேண்டும். மழை பாதிப்பால் தற்போது பாதிக்கு, பாதி கிடைப்பதே சிரமம் தான். இதனால் எனக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய இழப்பீடு தர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE