உலக சுற்றுலா தினம்: குமரியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சங்குமாலையுடன் பாரம்பரிய வரவேற்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: உலக சுற்றுலா தினமான இன்று கன்னியாகுமரி வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சங்குமாலை அணிவித்து சுற்றுலாத் துறையினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி நாடு முழுவதும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே கன்னியாகுமரி கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுத் துறையில் சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகமிட்டு சங்குமாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நெற்றியில் திலகமிட்டு பாரம்பரிய முறைப்படி சங்குமாலை அணிவித்தபோது, அவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி சுற்றுலா தின வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டு சுற்றுலா கையேடும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

உலக சுற்றுலா தினத்தையொட்டி பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டி உட்பட சுற்றுலா விழிப்புணர்வு போட்டிகள் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE