அரசு மருத்துவமனைகளில் மருந்துக் கிடங்குகளை மேம்படுத்தக் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருந்துக் கிடங்குகளை ஏசி வசதியுடன் கூடுதல் இடவசதியுடன் மேம்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மொத்தமாக கொள்முதல் செய்து வழங்குகிறது. தமிழகம் முழுவதும் 32 இடங்களில் மருந்துக் கிடங்குகள் உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக மருந்துக் கிடங்குகளில் போதிய இடவசதியுள்ளது.

இங்கிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மருந்துகள் அந்தந்த மருந்துகளின் தன்மைக்கேற்ப பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுவதில்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்ள மருந்து கிடங்குகளில் போதிய இடவசதியில்லை, சரியான காற்றோட்ட வசதி, ஏசி வசதி இருப்பதில்லை. மேலும், தனியார் மருத்துவமனைகளில் பின்பற்றப்படுவது போல் மருந்து இருப்பு, விநியோகம் விவரங்களை கணிணியில் கையாளும் வசதியும் இருப்பதில்லை.

இதனால் பிரதான மருந்துக் கிடங்குகளிலிருந்து கிளை மருந்துக் கிடங்குகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மருந்துக் கிடங்குகளிலிருந்து மருந்தகம் வரை ஒவ்வொரு மருந்துகளையும் அந்த மருந்துகளின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட தட்பவெட்ப நிலையில் பதப்படுத்த முடியவில்லை. இதனால் மருந்துகளின் வீரியம் குறைந்து நோயாளிகளுக்கு கொடுக்கும் போது பயனில்லாமல் போகிறது.

எனவே மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருந்துகள் சேமிப்பு கிடங்குகள், துணை மருந்துக் கிடங்குகள் மற்றும் மருந்தகங்களை ஏசி வசதியுடன் கூடுதல் இடவசதியுடன் மேம்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்ஸ்ட் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE