சுருக்குமடி, சிலிண்டர் மீன்பிடிப்புக்கு தடை கோரி ராமநாதபுர மீனவர்கள் காதில் பூச்சூடி போராட்டம்!

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: சுருக்குமடி, சிலிண்டர் மீன்பிடிப்பை தடை செய்ய வேண்டும், மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று காதில் பூச்சூடி ராமநாதபுரம் மீன்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடல் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி தலைமையில் கீழமுந்தல், மேலமுந்தல், வாலி நோக்கம் சாத்தார்கோவில் தெரு, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று காதில் பூச்சூடிக்கொண்டு வந்து ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் துணை இயக்குர் பிரபாவதியிடம் மனு ஒன்றை அளித்தனர். "மாதந்தோறும் நடத்தப்படும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடிப்பு, சிலிண்டர் மூலம் மீன்பிடிப்பை தடை செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இருந்தன.

இதுகுறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாதந்தோறும் ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் 2 மாதங்களாக நடத்தப்படவில்லை. மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கீழமுந்தல் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் சிலிண்டர் பயன்படுத்தி கடலுக்குள் மூழ்கி மீன்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்த 2 மீன்பிடிப்பு முறைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், மூக்கையூர், தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப் படகுகளின் கரையோர மீன்பிடிப்பையும் தடுக்க வேண்டும். தொடர்ந்து இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளது. இதைக் கண்டித்துத்தான் மீனவர்கள் காதில் பூச்சூடி மீன்வளத்துறை துணை இயக்குநரிடம் மனு அளித்தோம். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்று கருணாமூர்த்தி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE