தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

By காமதேனு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமான கே.டி.சிங்கின் 29 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை

இந்தியா முழுவதும் அமலாக்கத்துறை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் செந்தில் பாலாஜி, டெல்லியில் மணிஷ் சிசோடியா, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமாக கே.டி. சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

கே.டி.சிங்கின் அல்கெமிஸ்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அல்கெமிஸ்ட் டவுன்ஷிப் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் அதிக வருமானத்தை வழங்குவதாகவும், பொதுமக்களின் முதலீட்டுக்கு அதிக வட்டி விகிதம் தவிர கூடுதலாக வீட்டு மனைகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதாக கூறி அந்த நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ, உத்தரப் பிரதேச காவல் துறை மற்றும் மேற்குவங்க காவல் துறை ஆகியவை வழக்குகளைப் பதிவு செய்தன.

அமலாக்கத்துறை

அதனடிப்படையில் பணமோசடி சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை (ஈ.டி) நடத்திய விசாரணையில் அல்கெமிஸ்ட் குழுமத்துக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பீச்கிராஃப்ட் விமானம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அந்த குழுத்துக்கு சொந்தமாக உள்ள குடியிருப்புகள், சொத்துகள் ஆகியவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.29.45 கோடி என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE