ஆடுகளை தொடர்ச்சியாக வேட்டையாடும் நாய்கள்: திருப்பூரில் கால்நடை விவசாயிகள் நூதன போராட்டம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: ஆடுகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பலியான 7 ஆடுகளை பாடை கட்டி எடுத்துவந்து விவசாயிகள் திருப்பூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களால், ஆடுகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. நாய்கள் ஆடுகளை கடித்துக் கொன்று வருவதால், கால்நடை விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வீராணம்பாளையம் செந்தில்குமார் என்பவருக்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில், ரூ.1 லட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன. இந்நிலையில், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.

தொடர்ந்து காங்கயம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடையவே, இன்று பலியான ஆடுகளை பாடை கட்டி ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று (செப் 27) காலை கால்நடை விவசாயிகள் காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்தனர். திருப்பூர் - காங்கயம் சாலையில் மாநகர எல்லையான நல்லூர் சிக்னல் அருகே அவர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள், உயிரிழந்த ஆடுகளை பாடையுடன் சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இன்று நடந்த மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE