கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பிய எத்தனையோ பேருக்கு பதில் கிடைக்காத போது, அண்ணாமலைக்கு மட்டும் ஆர்டிஐ கிடைத்தது எப்படி எனவும், இது முற்றிலும் சட்ட விதிகளை மீறிய செயல் எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.
திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் பணம் தற்போது திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடியை சட்ட விரோதமாக அபகரித்துள்ளனர். இது முற்றிலும் பாஜகவின் பழி வாங்கும் செயல். இதே காலகட்டத்தில் 42 கோடி வசூலித்த பாஜகவிற்கு எந்த ஒரு வரி விதிப்பும் அபராதமும் இல்லை. ஜனநாயகத்தின் மீது செலுத்தப்பட்டுள்ள போர் இது. இந்தியா கூட்டணியின் வலிமையை குலைக்க பார்க்கின்றனர்.” என்றார்.
மேலும், “கச்சத்தீவை பற்றி மிகவும் கவலைப்பட்டு பேசும் மோடி, லடாக்கில் 4 ஆயிரம் சதுர மீட்டர் நம் இடம் பறி போய் உள்ளது பற்றி ஏன் பேசுவதில்லை?. கச்சத்தீவு விவகாரத்தில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல், தற்போது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ பைல் செய்த எத்தனையோ பேருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ தகவல் எப்படி கிடைத்தது?. இது முற்றிலும் விதி மீறிய செயல். கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பாஜக தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. ஓட்டு வங்கிக்காக சமயம் பார்த்து பாஜக மற்றும் மோடி கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “2024 காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும். கச்சத்தீவு விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்போம். 75 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் முதலமைச்சரை விசாரணைக்காக யாரும் கைது செய்யவில்லை. வரலாற்றில் நடக்காத விஷயங்களை நாம் பார்கின்றோம். கேஜ்ரிவால் கைது மிகப் பெரிய அரசியல் காழ்புணர்ச்சி. நிர்மலா சீதாராமன், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட வழங்கிய பிரமாண பத்திரத்தில் 2 கோடி இருப்பதாக அவரே தாக்கல் செய்துள்ளார். பிச்சை காரர், பிச்சை என்று எல்லாம் பேசும் நிர்மலா சீதாராமன் எப்படி மக்களை சந்திப்பார்? தேர்தலில் நிற்பார்?” என்று அவர் கூறினார்
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!
அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!
கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!
நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!