சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உப்பன்குளத்தில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு 5 ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள உப்பன்குளத்தில் இறந்தவர் உடலை தெரு வழியாக எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மே 31-ம் தேதி இரவில் உடப்பன்குளத்தை சேர்ந்த காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். . அப்போது அடையாளம் தெரயாதவர்கள் அவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக திருவேங்கடம் போலீஸார் வழக்கு பதிந்து அப்பகுதியை சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ் என்ற பரமசிவன், குருசாமி, கண்ணன், முத்துசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், வி. கண்ணன், முருகன் என்ற பாலமுருகன், முத்துகிருஷ்ணன், மற்றொரு கண்ணன், சுரேஷ் உட்பட 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மரண தண்டனை பெற்றவர்கள்

வழக்கு விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 3 பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மேற்கண்ட 11 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி சுரேஷ்குமார் கடந்த 24-ம் தேதி தீர்ப்பு கூறியிருந்தார். குற்றம் நீருபிக்கப்படாததால் 11 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 11 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று இரவு 7 மணிக்கு தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொன்னுமணி, சுரேஷ், உலக்கன் ஆகியோர் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதை அடுத்து 11 பேரும் நீதிமன்றத்தில் இரவில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து இரவு 8.30 மணியளவில் நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட பொன்னுமணி, காளிராஜ், குருசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் 3 பேரை கொலை செய்த குற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவின்கீழ் பதிவு செய்த வழக்கு ஆகியவற்றுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. குட்டிராஜ், கண்ணன், உலக்கன், மற்றொரு கண்ணன், முருகன் ஆகிய 5 பேருக்கு 5 ஆயுள் தண்டனையும், வே. கண்ணன், சுரேஷ் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 3 பேர் கொலை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE