மகனுக்கே மகுடம்; சுயத்தைத் தொலைக்கிறதா மதிமுக?

By எஸ்.சுமன்

எந்த வாரிசுக்கு எதிராக திமுகவை பிளந்துகொண்டு தனி இயக்கம் கண்டாரோ, அவரிடமே தனது வாரிசு வெற்றிக்காக நிற்கிறார் வைகோ. "பட்டத்து இளவரசரின் பட்டாபிஷேகத்துக்கு இடையூறாக இருப்பேன் என்று என்னை கட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்" என திமுகவினர் மத்தியில் அப்போது அனுதாபம் தேடிக்கொண்ட வைகோ மீது, இன்று அதற்கு இணையான குற்றச்சாட்டுகள் வரிசை கட்டுவதால் மதிமுக தத்தளிக்கிறது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு, அரசியலைவிட்டு ஓய்வெடுக்க விரும்புகிறார் வைகோ. மதிமுகவின் விசுவாசத் தொண்டர்களும், அவரது மனசாட்சியும் அதற்கு வாய்ப்பளிக்குமா எனத் தெரியவில்லை.

மனசொடிந்த கணேசமூர்த்தி

திராவிட இயக்கத்தின் அணுக்கத் தொண்டரான ஈரோடு கணேசமூர்த்தி மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 1993-ல் வைகோ உடன் திமுகவை விட்டு வெளியேறிய மாவட்டச் செயலாளர்களில் இவரும் ஒருவர். வைகோவுடன் 19 மாதங்கள் பொடா சிறைவாசம் அனுபவித்தவர்.

ஈரோடு சிட்டிங் எம்பி-யான கணேசமூர்த்தி, மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என நம்பியிருந்தார். அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். வைகோ மகன் துரை வைகோவும் மக்களவைத் தேர்தலில் நிற்க விரும்புவதை அவரும் அறிந்தருந்த போதும், மதிமுகவுக்கு 2 சீட் கிடைக்கும் அதில் ஒன்று நமக்கு என நம்பி இருந்தார் கணேசமூர்த்தி.

கணேசமூர்த்தி - வைகோ

ஆனால் ஒரு சீட் மட்டுமே திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டதும், அது வைகோ மகன் துரைக்குப் போனதும் கணேசமூர்த்தியை நொடித்துப் போகச் செய்தது. ஏற்கெனவே இருந்த மன அழுத்தத்துடன் இந்த வருத்தமும் சேர்ந்து கொண்டதால் விஷமாத்திரைகளை உண்டு தற்கொலை முடிவுக்குப் போய்விட்டார் கணேசமூர்த்தி. “தனக்கு சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி இந்த முடிவுக்குப் போகவில்லை. என் மகனுக்கு சீட் கொடுப்பதை அவரும் மகிழ்வுடன் வரவேற்றார்” என வைகோ இப்போது சொல்கிறார். ஆனால், 77 வயதில் தற்கொலைக்கு துணியும் அளவுக்கு அவரை உந்தித்தள்ளிய மனவேதனை எத்தனை வீரியமாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் ஆதங்கப்படுகிறார்கள்.

மதிமுக-வை கட்டமைத்த வைகோ

கொலைமுயற்சி பழியுடன் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவர் தரப்பு நியாயத்தை உணர்ந்த திமுகவினர் கொத்துக்கொத்தாக திமுகவை விட்டு வெளியேறினார்கள். மாவட்டச் செயலாளர்கள் மட்டுமன்றி கிராமங்கள் நெடுக கிளைச்செயலாளர் வரை செங்குத்தாக திமுக பிளவு கண்டது. அடுத்த எம்ஜிஆர் என வைகோ குறித்து வடக்கத்திய ஊடகங்கள் சிலாகித்தன.

வைகோ மீதான பழியையும் துயரத்தையும் தாங்க முடியாத இடிமலை உதயன் போன்ற தொண்டர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். பிரிந்து சென்ற மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ”இவருமா...” என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை கம்ம வியந்தார்.

வைகோ

மதிமுக என்ற புதிய இயக்கத்தை கட்டமைத்த வைகோவின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக அனுமானிக்கப்பட்டது. மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி; 2 தலைமுறைக்கும் அப்பால் தேசிய அரசியல் பெருந்தலைகளுடன் நெருங்கிப் பழகியவர். உயிரைப் பணயம் வைத்து இலங்கைக்கு தோணியில் சாகசப் பயணம் மேற்கொண்டவர். அங்கே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு நெருங்கிப் பழகியவர். ஆனால் அதனை வைத்து மட்டுமே தமிழகத்தில் அரசியல் லாபம் தேடாதவர். தமிழகம் தழுவிய நடைபயணத்தில் பெரும் அரசியல் எழுச்சியை கண்டவர்... என வைகோவின் அரசியல் தடம் வேறு எவரோடும் ஒப்பிட இயலாத வகையில் தனித்தன்மை கொண்டிருந்தது.

இங்கேயும் வாரிசு பிரவேசம்

ஆனால், திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர் முன்னும் பின்னுமாக ஊசலாட்டம் கண்டதும், ஜெயலலிதாவின் அரசியல் லாபத்துக்கு தன்னைப் பயன்படுத்திக்கொள்ள வைகோ அனுமதித்ததும், தவறான அரசியல் கணக்குடன் விஜயகாந்த் போன்றவர்களை வைகோ வழிநடத்தியதுமாக மதிமுகவின் முக்கிய அரசியல் திருப்பங்கள் அனைத்துமே விபத்துக்குள்ளானது.

ஒருகட்டத்தில் திமுக ஆதரவு நிலையை வைகோ எடுத்ததுமே, அவர் மதிமுக-வை கட்டமைத்ததன் நோக்கம் இற்றுப் போனது. அதற்கு முன்னதாகவே வைகோவின் ஊசலாட்டம் கண்டு கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் தாய்க் கழகம் திரும்பினார்கள்.

திமுக ஆதரவு என்றதுமே அடுத்த சில ஆண்டுகளில் திமுகவில் மதிமுகவை கரைத்துவிடுவார் வைகோ என மதிமுக தொண்டர்கள் சோர்ந்து போனார்கள். இப்படித்தான் அதிருப்தியின் உச்சத்தில், பெரும் இயக்கமாக கட்டமைக்கப்பட்ட மதிமுக ஒட்டுமொத்தமாக கலகலத்து தேய ஆரம்பித்தது. தீவிர விசுவாசிகள் மற்றும் போக வழி தெரியாத சிலர் மட்டுமே வைகோ உடன் பயணத்தை தொடர்ந்தனர். அவர்களையும் துரை வைகோவின் அரசியல் நுழைவு அதிருப்தி அடையச் செய்தது.

மற்ற கட்சிகளில் இல்லாதததை வைகோ செய்துவிடவில்லை. திமுக, பாமக போன்ற கட்சிகள் சரிந்தாலும், வாரிசு பலம் மூலமே சடுதியில் எழுந்து நிற்கின்றன. அதிமுக போன்ற பிரம்மாண்ட இயக்கங்கள் முறையான வாரிசு முன்னறிவிக்கப்படாத காரணத்தாலேயே, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களுக்குப் பின்னர் கடும் நெருக்கடி கண்டன.

துரை வைகோ; வைகோ மற்றும் மு.க.ஸ்டாலின்

துரை அணுகுமுறை சாதிக்குமா?

அப்பாவைப் போலவே எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவராய் இருந்தாலும் துரை வைகோவின் அணுகுமுறையும், கன்னி உரைகளும், பத்திரிகையாளர் சந்திப்புகளும், இவருக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்துத்தான் பார்ப்போமே என்று வாக்காளர்களைத் தூண்டும் வகையிலேயே இருக்கிறது. அரசியலில் தான் பழுதில்லை என்பதை, ஆக்டிவ் அரசியலுக்குள் நுழைந்த ஓரிரு ஆண்டுகளில் துரை வைகோ நிரூபித்தார். ஆனால், மதிமுக கட்டமைக்கப்பட்டதன் நோக்கம், வைகோவின் முழங்கிக் கடந்த அரசியல் பயணம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் துரை துருத்தலாகவே நிற்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர் வைகோ உடல்நலம் குன்றியபோது, வைகோவை ஆலோசிக்காது தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட துரை, மதிமுக தொண்டர்கள் சோர்ந்து போகாதிருக்க உற்சாகப்படுத்தினாராம். வைகோவே சிலிர்ப்புடன் பகிர்ந்த தகவல் இது.

ஒரு வழியாய் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை தள்ளி வைத்துவிட்டு துரை வைகோவும் அரசியல் பழகினார். ”எனக்கு அரசியலில் விருப்பமே இல்லை. அப்பாவின் உடல் நிலையைக் கருதியே முழு அரசியலை தெரிவு செய்தேன்” என்று வெளிப்படையாக பொதுவெளியில் பேசுகிறார் துரை. அப்படியே தந்தை வைகோவின் வெடிப்புற பேசும் சாயலும் அழகாக அவருக்கு வருகிறது. ஆனால் அதனை ரசித்து ஏற்கும் மனநிலையில் மதிமுக தொண்டர்கள் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

துரை தேறுவாரா... மதிமுக மீளுமா?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் தான் என்று முடிவானதும், கசப்பைக் காட்டிக்கொள்ளாத வைகோ, திருச்சியை தேர்வு செய்து அங்கே மகனையே வேட்பாளராக அறிவித்தார். மதிமுக சின்னமான பம்பரத்தில் தான் நிற்போம் என வைகோ அண்ட் சன்ஸ் முதலில் முரண்டு பிடித்தனர். திமுகவும் அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் முறையிட்டும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் துரைக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போய்விட்டது.

வைகோ மகன் துரை உடன்

பெரம்பலூர் தொகுதி மகன் அருண் நேரு நிற்பதால் அங்கே தனது முழு பலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அவரது தோளில் வேண்டாத சுமையாக துரை வைகோவை ஜெயிக்க வைக்கும் பொறுப்பையும் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்திருக்கிறார். பணி அழுத்தம் தாங்காது நிஜமாலுமே தேர்தல் பிரச்சாரத்தில் மயக்கம் போட்டிருக்கிறார் கே.என்.நேரு.

யதார்த்தம் இப்படி இருக்க, துரை வையாபுரியோ, “நாங்கள் சுயமரியாதைக் காரர்கள்... செத்தாலும் பம்பரம் சின்னத்தில் தான் நிற்போம்” என்று நேரு முன்பாகவே உதயசூரியனை புறக்கணித்து முழங்கினார். கடுப்பான திமுக நிர்வாகியிடம் அங்கேயே வசையையும் வாங்கிக்கட்டினார் துரை.

அதே மேடையில், “எனது தந்தை ஒரு சகாப்தம்” என கண்கலங்கினார் துரை. உண்மைதான். ஆனால் வைகோவின் அரசியல் வரலாறு உணர்த்தும் பாடங்கள், அரசியல் பழகுவோருக்கு படிப்பினை தரக்கூடியவை. அதில் வைகோவின் சாதனைகள் மட்டுமன்றி, அவரது தடுமாற்றங்களிலும் முக்கிய படிப்பினைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை வைகோ அல்லது துரை வைகோ உணர முன்வருகையில், கணேசமூர்த்திகளின் ஆன்மா அமைதி பெறும்; மதிமுக என்ற அரசியல் இயக்கம் மீளவும் தலைப்படும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE