அனகாபுத்தூர்: கனமழை காரணமாக மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்ததில் 2 எருமை மாடுகள் உயிரிழந்தன.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், யாதவா தெருவை சேர்ந்தவர் போகன் (50). இவர், தனது வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு சென்னை புறநகர் பகுதி முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அனகாபுத்தூர் அண்ணல் காந்தி தெருவில் போகனுக்குச் சொந்தமான 2 எருமை மாடுகள் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்தசமயத்தில் உயரே சென்ற உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், போகனின் இரண்டு எருமை மாடுகளும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இது குறித்து சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடுகள் இறந்தது தொடர்பாக வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் மின் கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு எருமை மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி. மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, செங்கல்பட்டில் 6 மி.மீ, திருப்போரூரில் 21 மி.மீ, கேளம்பாக்கத்தில் 40 மி.மீ, திருக்கழுக்குன்றத்தில் 24 மி.மீ மாமல்லபுரத்தில் 12 மி.மீ, தாம்பரத்தில் 37 மி.மீ மழை பதிவானது.
» ‘உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது’ - செந்தில்பாலாஜிக்காக உருகிய முதல்வர் ஸ்டாலின்!