விலை வீழ்ச்சியால் பறிக்காமல் விடப்பட்ட வெண் பூசணிகள்: விருதுநகர் விவசாயிகள் வேதனை

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் வெண் பூசணிக்கு உரிய விலை கிடைக்காததால் அதை பறிக்காமல் விவசாயிகள் தோட்டத்திலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்று நீர் பாசன வசதி உள்ள விவசாயிகள் கோடையிலும் விளையக்கூடிய வெண்பூசணியை பயிரிடுகின்றனர். மாவட்டத்தில் குறைந்த அளவுதான் பூசணி சாகுபடி நடக்கிறது என்றாலும் அந்தந்த நேர சந்தை விலை மதிப்பைப் பொறுத்து விவசாயிகள் லாபம் அடைந்து வந்தனர். பூசணி சாகுபடியில் களை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். அதேசமயம் 15 முதல் 20 டன் வரை சாகுபடி கிடைக்கும்.

தற்போது, வெண் பூசணி விலை கிலோ ரூ.15க்கு விற்பதால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. எனவே, மேற்கொண்டு செலவை தவிர்ப்பதற்காக பூசணியை பறிக்காமல் கொடியிலேயே விட்டுவிட்டனர். அதேசமயம் வியாபாரிகள் பொதுமக்களிடம் கிலோ ரூ.40 வரை விற்கின்றனர் என்கின்றனர் விவசாயிகள்.

உழவர் சந்தைகள் நீண்டகாலமாக சரிவர இயங்காததால் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் விவசாயிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய இனாம்ரெட்டியபட்டியில் வெண் பூசணி சாகுபடி செய்த விவசாயி அஸ்வின்குமார், “சுமார் 18 ஏக்கரில் வெண் பூசணி சாகுபடி செய்துள்ளேன்.

ஒரு காய் சுமார் 10 கிலோ வரை எடை உள்ளது. காய் பெரிதாக உள்ளதால் வியாபாரிகள் யாரும் உரிய விலைக்கு எடுக்கவில்லை. நல்ல விளைச்சல் இருந்தும் இந்த ஆண்டு வெண் பூசணிக்கு உரிய விலை இல்லை. இதனால் காயை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுவிட்டோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE