உத்தரபிரதேச மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உபி மாநிலம் நாகினா தொகுதியில் போட்டியிடும் 37 வயது சந்திரசேகர் ஆசாத் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்திருப்பதை அடுத்து, ஆயுதம் தாங்கிய 11 சிஆர்பிஎப் கமாண்டோக்கள் அவரது பாதுகாப்புக்கு நியமிக்கப்படுகின்றனர்.
உபியில் போட்டியிடும் முடிவை அவர் அறிவித்தது முதலே ஆசாத் உயிருக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக உபி காவல்துறை கண்டறிந்தது. அதன் அடிப்படையில் மாநில காவல்துறை சார்பில் ஆயுதமேந்திய போலீஸார் ஆசாத் பாதுகாப்பில் பணியமர்த்தப்பட்டனர்.
இதனிடையே மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளவர்களின் பட்டியலை மத்திய உளவுத்துறையினர் கணக்கெடுத்தனர். அவற்றை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், அதன் அடிப்படையில் சந்திரசேகர் ஆசாத்துக்கு சிஆர்பிஎஃப் இடம்பெறும் ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு உத்தரவானது.
தற்போது மட்டுமன்றி இதற்கு முன்னதாகவும் ஆசாத் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், உத்தரபிரதேச மாநிலம் தியோபந்தில், காரில் குறுக்கிட்ட மர்மநபர்கள் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். வயிற்றில் தோட்டா பாய்ந்தபோதும், உடனடி மருத்துவ பராமரிப்பு காரணமாக ஆசாத் உயிர் தப்பினார். தற்போதைய ஒய் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஷிஃப்ட் அடிப்படையில் ஆசாத் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
இந்தியாவில் விஐபிக்களுக்கான பாதுகாப்புகள் இஸட் பிளஸ், இஸட், ஒய் மற்றும் எக்ஸ் என 4 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. மத்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வரிசையில், அதன் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கும் அண்மைய்ல் இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தீய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது எஸ்பிஜி பாதுகாப்புக்குப் பிறகு, அதிக அளவில் அச்சுறுத்தல் உள்ள இந்திய விவிஐபி-க்கு அரசாங்கம் வழங்கும் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடாகும். இதில் 55 நவீன ஆயுதம் தரித்த படையினர் இடம்பெற்றிருப்பார்கள். சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் 24 மணி நேரமும் உடன் இருப்பர். குண்டு துளைக்காத வாகனம் மற்றும் மூன்று ஷிப்டுகளில் பாதுகாப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.
எஸ்பிஜி பாதுகாப்பு என்பது, பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது தனிப்பட்ட குடும்பத்தினருக்கான பிரத்யேக பாதுகாப்பாக வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு வரை, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு இருந்தது. பின்னர் அது இஸட் பிளஸ் நிலைக்கு குறைக்கப்பட்டது. 1984-ல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு எஸ்பிஜி எனப்படும் 3 ஆயிரம் பேர் கொண்ட விசேஷ படையினர், பிரதமர் பாதுகாப்புக்கு என உருவாக்கப்பட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!
பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!
நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!
கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!
46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!