பாஜக கூட்டணி உரசல் ... விலகுகிறது மத்திய அமைச்சரின் கட்சி!

By காமதேனு

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு இடம் ஒதுக்கப்படாததால் பாஜக கூட்டணியில் இருந்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மக்களவைத் தேர்தலில் நானூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற இலக்கில் பாஜக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதன் காரணமாக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதால் பாஜக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் தேசிய அளவில் வெளியேறியுள்ளன. தமிழ்நாட்டில் இருந்தும் கூட அதிமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளன. அந்த வகையில் பாஜக கூட்டணியில் இருந்து மகாராஷ்டிராவை சேர்ந்த இந்திய குடியரசு கட்சியும் தற்போது வெளியேறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மகாராஷ்டிராவை சேர்ந்த இந்திய குடியரசு கட்சி கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக கூட்டணியில் இருந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவரான ராம்நாத் அத்வாலே தற்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு இரண்டு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அவர் பாஜகவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பாஜகவின் தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடமும் அவர் நேரில் சந்தித்து பேசி இருந்தார். ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட பாஜக ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஷீரடி தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் கோரியிருந்த நிலையில் ஒரு இடம் கூட பாஜக வழங்காததால் அவர் அதிருப்தியில் உள்ளார்.

இந்தநிலையில் ராம்தாஸ் அத்வாலே பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக முடிவெடுத்துள்ளார். அவர் இந்தியா கூட்டணியில் இணைவார் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் பாஜக தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE