சேலத்தில் வழிநெடுக வரவேற்பு... அக்ரஹாரம் பகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குசேகரிப்பு!

By காமதேனு

சேலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

சேலம் மார்க்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று மாலை 6 மணியளவில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சேலம் மக்களவைத் தொகுதி திமு. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

முன்னதாக தர்மபுரியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் தங்கி உள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வழக்கம்போல் நடை பயிற்சிக்கு கிளம்பினார். அப்போது மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்பதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதன்படி சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்ற மு.க.ஸ்டாலின் நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்று, அங்குள்ள பொதுமக்களை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அங்கிருந்த மக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பலரிடமும் கைகுலுக்கி திமுகவுக்கு வாக்களிக்குமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மார்க்கெட்டுக்கு வந்திருந்த மக்கள், அங்கு முதல்வர் ஸ்டாலினைக் கண்டதால் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE