சென்னை: நவக்கிரக கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் ரூ.750 கோடி செலவில் கும்பகோணம் - மயிலாடுதுறை - சீர்காழி வழித்தடத்தில் 136 பி என்ற புதிய நெடுஞ்சாலையை விரைவில் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு 8 வாரத்தில் பதிலளி்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை- கும்பகோணம் பகுதிகளில் சூரியனார் கோயில், கஞ்சனூர் சுக்கிரன் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், திருமணஞ்சேரி, திருக்கடையூர், திருநாங்கூரில் உள்ள திவ்ய தேசவைஷ்ணவ கோயில்கள் என ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். இதனால் கும்பகோணம் -மயிலாடுதுறை - சீர்காழி வழித்தடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போதுள்ள மாநில நெடுஞ்சாலைகள் அதிக வளைவுகளுடனும், குறுகலாகவும் இருப்பதால் அடிக்கடி விபத்துகளுடன் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. ஆம்புலன்ஸ்கள் உரிய நேரத்தில் உயிர்காக்கும் மருத்துவமனைகளை சென்றடைய முடியவில்லை. வெளிமாநில சுற்றுலா பேருந்துகள் இங்குள்ள கோயில்களுக்கு வந்து செல்ல சிரமம் ஏற்பட்டு சுற்றுலா வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்த அவல நிலையைப் போக்க சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை வழியாக கும்பகோணத்துக்கு 52 கிமீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளான 32 மற்றும் 36-ஐ இணைக்கும் வகையில் 100 அடிஅகலம் கொண்ட புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நடவடிக்கையின்பேரில், இவ்வழித்தடத்தில் நவக்கிரக கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலமாக ரூ. 750 கோடி செலவில் 52 கிமீ தூரத்துக்கு 136 பி என்ற புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. எனவே இந்த புதிய நெடுஞ்சாலையை விரைவில் அமைக்க மத்திய அரசுக்கும், நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வி்ல் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். சத்யராஜ் ஆஜராகி, ``இந்த புதிய வழித்தடத்தில் எந்தவிதமான வனவிலங்கு சரணாலயமோ, காப்புக்காடுகளோ, ரயில்வே மேம்பாலமோ கிடையாது. அதேபோல 100 கிமீ தூரத்துக்கு உட்பட்ட சாலைகளுக்கு சுற்றுப்புறச்சூழல் தொடர்பான தடையில்லா சான்றும் பெற தேவையில்லை. ஆனாலும் இந்த சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது'' என வாதிட்டார். அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்கணேஷ் இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார். அதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கை 8 வார காலத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
» வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும்: சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றார் கங்கனா ரனாவத்
» கரூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது