ஷாக்... காஞ்சிபுரத்தில் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது... அதிகாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்!

By காமதேனு

காஞ்சிபுரத்தில் உள்ள நடுவரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் அதிகாலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் விவசாய நிலங்கள் மூழ்கின. அத்துடன் குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்ததால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளநீர் இன்னும் பல பகுதிகளில் வடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது. அந்த பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் இந்த ஏரியின் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்றுவருகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென இந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்ததால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இந்த ஏரி தானாக உடைந்ததா அல்லது மர்மநபர்கள் யாரும் உடைத்தார்களா என சோமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஏரி உடைப்பால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE