சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டமா மதுரை? - ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் டாப்-10 பட்டியலில் மதுரை மாவட்டம் முதல் இடம் பெற்றுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த செ.கார்த்திக் என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தான் திரட்டிய தகவல்களை அடிப்படையாக வைத்து கூறியதாவது: ''கடந்த 2024 மார்ச் மாத இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையின் ஏடிஜிபி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 394 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக முதல் இடத்தில் மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள் உள்ளது. 2-வது திருநெல்வேலியில் 29 கிராமங்களும், 3-வது திருச்சியில் 24 கிராமங்களும், 4-வது இடத்தில் தஞ்சாவூரில் 22 கிராமங்களும், 5-வது இடத்தில் தேனியில் 20 கிராமங்களும் வருகின்றன. இந்தப் பட்டியலின் கடைசியாக 38-வது இடத்தில் கள்ளகுறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒரே ஒரு கிராமம் மட்டும் கண்டறிப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பட்டியல் வரிசையில் சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மறுபுறம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2021-ல் 597 கூட்டங்களும், 2022-ல் 988 கூட்டங்களும், 2023-ல் 3,221 கூட்டங்களும், 2024 மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 1,861 கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக 13-வது இடத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 11 நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு விழிப்புணர்வுக் கூட்டங்கள் உள்பட மொத்தம் 534 விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இதே காலகட்டத்தில் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் 335 கூட்டங்களே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி இடமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு கிராமம் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த ஒரு கிராமத்திற்கு மட்டும் 136 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை, திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பிடும்போது கடந்த 2023-ம் ஆண்டு விழிப்புணர்வுக் கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், சாதிய வன்கொடுமைகள் நடைபெறும் கிராமங்களில் மக்களிடையே சாதிய பாகுபாடுகளற்ற நல்லிணக்கத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடிகிறது.

அதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகள் இணைந்து தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவதோடு ஆக்கபூர்வமாக சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள 394 கிராமங்களை ரோல் மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு அவ்வாறான மாடல் கிராமங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு தொகை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE