கடலூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு!

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் அருகே ஆலப்பாக்கம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக வட்ட கிடங்கு ஆகியவற்றில் கூட்டுறவு, உணவு மற்றும் நூகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (செப்.25) காலை அதிரடியாக கடலூர் அருகே உள்ள ஆலபாக்கம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவந்த நெல்லின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அந்த நெல்லின் ஈரப்பதத்தின் அளவை கருவி மூலம் சோதனை செய்து பார்த்தார். கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்துவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் எடையை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக வட்ட கிடங்கில் ஆய்வு செய்தார்.

அப்போது, கிடங்கில் இருந்த அரிசி, கோதுமை, பாமாயில் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்ததுடன், பாமாயில் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை துல்லியமாக பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிடங்கில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான கழிவறை வசதி இல்லை என்றும், பல தொழிலாளர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதற்கு ராதாகிருஷ்ணன், ''கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள தொழிலாளர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

உணவுத் துறை செயலாளரின் இந்த திடீர் விசிட்டில் கடலூர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தங்க பிரபாகரன், துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) விஸ்வநாதன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) பொறுப்பு ராமநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE