நெல்லையில் 494 மி.மீ மழை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடிக்கிறது. இன்று (மே 25) காலை நிலவரப்படி மாவட்டம் முழுக்க 494 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இந்நிலையில், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இன்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 28, சேரன்மகாதேவி- 9.40, மணிமுத்தாறு- 25.20, நாங்குநேரி- 14.80, பாளையங்கோட்டை- 11.40, பாபநாசம்- 46, ராதாபுரம்- 16, திருநெல்வேலி- 6, சேர்வலாறு அணை- 26, கன்னடியன் அணைக்கட்டு- 23.20, களக்காடு- 8.60, கொடுமுடியாறு அணை- 37, மூலைக்கரைப்பட்டி- 7, நம்பியாறு- 24, மாஞ்சோலை- 26, காக்காச்சி- 47, நாலுமுக்கு- 72, ஊத்து- 67, மொத்தம்- 494.60. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்து 64.30 அடியை எட்டி உள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.2 அடியாகவும், சேர்வலார் அணையில் நீர்மட்டம் சுமார் 13 அடி உயர்ந்து 85.34 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4372.88 கன அடி, மணிமுத்தாறு அணைக்கு 802 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து 200 கன அடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 345 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் கன மழையினால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கான தடை தொடர்கிறது.தொடரும் மழையால் கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டியுள்ளனர். பல்வேறு இடங்களில் உளுந்து மற்றும் பயிறுவகை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் 1500 நாட்டுப்படகுகள் கடற்கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE