நெல்லை - ராதாபுரம் அருகே மழையால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் தொடர் மழையால் சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை காலதாமதமாக பெய்ததால் நெல் நடவு பணிகள் காலதாமதமாகவே தொடங்கியது. இதனால் அறுவடைக்கும் காலதாமதம் ஏற்பட்டது. ராதாபுரம் வட்டாரத்தில் இம்மாத தொடக்கத் திலிருந்து நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வட்டாரத்தில் கடந்த 15 நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சீலாத்திகுளம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மழைத் தண்ணீரில் மூழ்கிய பெருவாரியான நெற்பயிர்கள் முளைத்துவிட்டன. இதனால் இனி மழை ஓய்ந்து அறுவடை செய்தாலும் நெல் மணிகளை பயன்படுத்த முடியாது. அத்துடன் வீட்டிலும் வைத்து பயன்படுத்த முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி வேலு, “நெல் சாகுபடிக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். தற்போது மழையால் அறுவடை செய்யும் தருவாயில் நெற்பயிர்கள் சேதமாகி மிகுந்த வேதனை அடைய வைத்துள்ளது. இப்பகுதியில் மட்டும் 50 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சேதாரம் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். அரசு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள இயலும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE