வட்டாரப் போக்குவரத்துத்துறை திடீர் சோதனை: ஏர்ஹாரன் பயன்படுத்திய 37 பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகளி்ல் ஏர்ஹாரன்கள் விதிகளை மீறி பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இணைந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில், வெவ்வேறு இடங்களில் குழுக்களாக பிரிந்து இன்று (செப்.24) மாலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர்.

இதில் அரசு, தனியார் என மொத்தம் 54 பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 அரசுப் பேருந்துகள் உட்பட 37 பேருந்துகளில் விதிகளை மீறி ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட பேருந்துகளில் இருந்த ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன. குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 37 பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது என வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE