குமரியில் களரி பயிற்சிக்கு தனி ஆராய்ச்சி மையம்: அமைச்சர் தகவல்

By எல்.மோகன்

நாகர்கோவில்: குமரியில் சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தில் களரி பயிற்சிக்கான தனி ஆராய்ச்சி மையமும் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இன்று சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமைப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: "கன்னியாகுமரி மாவட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இயற்கை முறையில் மருத்துவம் மேற்கொள்ளும் வகையில் சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட அரசுக்குச் சொந்தமான சுமார் 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை மாவட்ட ஆட்சியருடன் சென்று பார்வையிடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அரிய வகை மருத்துவ குணமுடைய மூலிகைகள் நிறைந்த மாவட்டமாகும். சித்த மருத்துவத்தில் வர்மக்கலை என்பது முக்கியமான ஒன்றாகும். நம்முடைய முன்னோர்கள் சித்த மருத்துவத்தையும், வர்மக் கலையையும் பயன்படுத்தி சித்த வர்ம மருத்துவத்தில் உலக அரங்கில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறையினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தியது.

அதன், அடிப்படையில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இறுதி அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான உரிய வழிகாட்டுதல்கள் பெற்று பணிகள் துவங்கப்படும். பலவிதமான உள் மற்றும் வெளிக் காயங்கள், நரம்பு தசை நோய்கள், நீண்ட நாட்களாக உள்ள உடல் பிரச்சினைகள், மூட்டு, கழுத்து, முதுகு பிரச்சினைகள், பார்வை கோளாறுகள், ஒற்றைத் தலை வலி பிரச்சினைகள் உள்ளிட்ட பலவிதமான உடல் பிரச்சினைகளுக்கு சித்த வர்ம மருத்துவ மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குரிய பாரம்பரியமான வர்ம சிகிச்சைகள் குறித்து வர்ம இலக்கியங்களில் கண்டறிந்து, அவற்றினை பாதுகாப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தில் களரி பயிற்சிக்கான தனி ஆராய்ச்சி மையமும் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில் வேல் முருகன், சித்த வர்ம மருத்துவ வல்லுநர்கள் கிறிஸ்டியன், செந்தில்வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE