ரயில்களில் டிராலி பேக் முறைக்கு எதிர்ப்பு: திருச்சியில் அகில இந்திய கார்டுகள் கவுன்சில் போராட்டம்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: ரயில்களில் கார்டு (தற்போது மேலாளர்) கடைசிப் பெட்டியில் பயணிப்பார். ரயில் நிலையங்கள், ரயில்களுக்கு சிக்னல் காட்டுவது, அவசர காலங்கள், விபத்துக் காலங்கள் போன்றவற்றில் ரயில் கார்டுகளின் பணி மிக முக்கியமானது. கார்டுகள் தாங்கள் பணி செய்யத் தேவையான கொடிகள், கை சமிக்கை விளக்குகள், எல்.வி.போர்டு, மினுக்கும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சட்டப் புத்தகங்கள், பாதுகாப்பு குறிப்பேடுகள் மற்றும் படிவங்களை உடன் எடுத்துச் செல்கின்றனர்.

இத்துடன் விபத்து மற்றும் ஆபத்துகளை பின்னால் அல்லது பக்கத்துத் தடத்தில் வரும் ரயில் வண்டியை எச்சரித்து நிறுத்தும் பொருட்டு பயன்படுத்தப்படும் வெடிக்கும் தன்மையுடைய (டெட்டனேட்டர்) கட்டிகள், பயணிகளுக்கான முதலுதவிப் பெட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வலுவான தகரப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட ‘கார்டு லைன் பாக்ஸ்’ எனப்படும் பெட்டிகளை ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் ஏற்றி, இறக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வேயின் செலவினங்களை குறைக்கும் வகையில், லைன் பாக்ஸ்களை எடுத்துவிட்டு, சில பொருட்களை குறைத்து அவற்றை டிராலி பேக்குகளில் நிரப்பி, ரயில் கார்டுகளையே எடுத்துச் செல்லும் முறையை ரயில்வே நிர்வாகம் அறிமுகப் படுத்த உள்ளது. இதற்கு நாடு முழுவதும் ரயில்வே கார்டுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அகில இந்திய கார்டுகள் கவுன்சில் (ஏ.ஐ.ஜி.சி) சார்பி்ல், இதைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏ.ஐ.ஜி.சி தென் மண்டலம் சார்பில், டிராலி பேக் அறிமுகத்தைக் கண்டித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கோட்டத் தலைவர் ஜி.கிளாடி தினேஷ், செயலாளர் பி.எம்.ஏ.எஸ் ராஜ் ஆகியோர் தலைமை வகித்து பேசியது: "வெடிக்கும் தன்மையுடைய டெட்டனேட்டர், மின்சாதனங்கள் மழை, பனி, வெயில் போன்ற பல்வேறு இயற்கை சூழ்நிலைகளில் இருந்தும், பயணிகளிடம் இருந்தும் பாதுகாப்பாகவும், சாதனங்கள் நீண்ட நாட்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகைகளிலும் தகரப்பெட்டியில் வைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை நெகிழும் தன்மையுயை வேறு பைகளில் வைப்பது பாதுகாப்பு குறைபாடுகளுக்கு ஏதுவாக அமையும்.

ரயில் பணியின் காரணமாக பல ஊர்களுக்கும் பாதுகாப்பாக ரயில்களை இயக்கச் செல்லும் பணியில் ஈடுபடும் ஓடும் தொழிலாளர்கள் (கார்டுகள்) 3 நாட்கள் வரை வெளியூர்களில் தங்க வேண்டிய சூழ்நிலையில், சீருடை, மாற்று உடைகள், சுகாதார மற்றும் குளியலறை பொருட்கள், மருத்துவப் பொருட்கள், வாக்கி டாக்கி, செல்போன், சார்ஜர்கள், பருவ காலத்துக்குத் தேவையான குடை, ரெயின் கோட், ஸ்வெட்டர் போன்ற பொருட்களுடன் குடிநீர், உணவு, போன்ற 15 கிலோ வரையிலான பொருட்களை இரண்டு பைகளில் எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் 7 கிலோ அடங்கிய ரயில்வே உபகரணங்கள் அடங்கிய பெட்டியை சுமப்பது ரயில் நிலையங்களில் கடைசிப் பெட்டியிலிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது, ரயில் நிலைய படிக்கட்டுகளில் சுமைகளுடன் தினம், தினம் பலமுறை ஏறி இறங்குவது போன்றவை மேலும் கடுமையான பணிச் சுமையையும், மனச்சேர்வையும் அதிகரிக்கும். 50 வயது கடந்தவர்கள், சர்க்கரை, பிபி நோயாளிகள், பெண் ஓடும் தொழிலாளர்கள் பல பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.

மின் விளக்கு, பாத்ரூம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற சரக்கு ரயில்களில் பணிபுரியும் கார்டுகள் சரியான பாதை, வெளிச்சம் அற்ற பெரிய சரக்கு யார்டுகளில் அதிகப்படியான சுமைகளை எடுத்துச் செல்வது மிகவும் கடினமான செயலாக அமையும். எனவே டிராலி பேக் முறையை அறிமுகம் செய்யாமல் பழையபடி லைன் பாக்ஸ் முறையையே தொடர வேண்டும்’ என்றனர். முன்னாள் மத்திய சங்கத் துணைத் தலைவர்கள் ரங்காச்சாரி, காமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE