நாகர்கோவில்: நாகர்கோவில் இளங்கடையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் ஹிஸ்புத் உல் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள்சேர்ப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை மேற்கொண்டு இதில் தொடர்புடையவர்களை மத்திய குற்றப்பிரிவு, மற்றும் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலையில் இருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாகர்கோவில் இளங்கடை, தெற்கு புதுத்தெரு பகுதியில் வசித்து வரும் முகம்மது அலி என்ற அலி ஆலிம்ஷா என்பவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக என்ஐஏ அதிகாரிகள் வந்தனர்.
இளங்கடை பகுதியில் வீட்டை தேடிய நிலையில் 2 மணி நேரத்திற்கு பின்பு முகம்மது அமீர் வசித்து வரும் வாடகை வீட்டை கண்டு பிடித்தனர். அப்போது அங்கு அவர் இல்லை. அவரது மனைவி இருந்துள்ளார். பின்னர் அலி ஆலிம்ஷாவின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அலி ஆலிம்ஷாவை பற்றி தெரியவில்லை.
» பாலியல் புகாரளிக்க குழுக்களை அமைக்கவிட்டால் தனியார் நிறுவனங்களின் அனுமதி ரத்து: கலெக்டர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அவர், இரு வாரங்களுக்கு முன்புதான் இளங்கடைக்கு வாடகைக்கு குடியேறிவுள்ளார். இதற்கு முன்பு நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் குடியிருந்ததும் தெரியவந்துள்ளது. ஹில்புத் உல் தஹீரின் அமைப்பிற்கு அவர் ஆள் திரட்டினாரா? எந்த பகுதிகளில் இருந்து ஆள்களை சேர்த்துள்ளார் என என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குமரி மாவட்டத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.