பாலியல் புகாரளிக்க குழுக்களை அமைக்கவிட்டால் தனியார் நிறுவனங்களின் அனுமதி ரத்து: கலெக்டர் அறிவிப்பு

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ளக மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். 10-க்கும் குறைவானவர்கள் பணிபுரியும் இடங்களில் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும்.

இந்தக் குழுக்கள் மூலம் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தக் குழுவை அமைக்க மறுக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இந்த புகார் குழு அமைக்கப்படாத பட்சத்தில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை www.shebox.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாக எந்தவித பயமும் இல்லாமல் பதிவு செய்யலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE