இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

By காமதேனு

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் நேற்று மாலை வரை 751 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அவற்றில் பெரும்பாலானவை சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி அன்று தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் முதல் கட்டத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கூட்டணிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பெரும்பாலானவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 22 வேட்புமனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. 21-ம் தேதி 9 மனுக்களும், 22-ம்தேதி 47 மனுக்களும் பெறப்பட்டன. 23, மற்றும் 24 ஆகிய தேதியில் சனி, ஞாயிறு என்பதால் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை.

சுயேட்சை வேட்பாளர்

கடந்த திங்களன்று நல்லநாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் அன்று அதிகம் பேர் வேட்பு மக்களை தாக்கல் செய்தனர். அன்றைய தினம் ஒரே நாளில் 405 வேட்பு மனுக்கள் தாக்கலாகியது.

கனிமொழி எம்.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஒரு சில வேட்பாளர்கள் வேட்பு மனு நேற்று தாக்கல் செய்தனர். ஆனால் அதிக அளவில் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் நேற்று மொத்தம் 258 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை மொத்தம் 751 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்று அது ஆயிரத்தைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE