மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்து, கடந்து சென்றுள்ளது. புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இன்னும் பல பகுதிகளில் வெள்ளநீர் முழுவதுமாக வடியவில்லை. மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் பல நோய்களுக்கு அச்சாரமிட்டிருக்கின்றன.
மழைநீரோடு, தேங்கிய குப்பைகள், கழிவுகள் என அனைத்தும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ள நிலையில், மேலும் நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 1000 முகாம்கள் நடைபெற உள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களில் 2000 முகாம் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று, அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். தற்போது பருவமழைக்காலமாக உள்ள காரணத்தினால் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களில் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களைக் தற்காத்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.