காய்கறி வாங்க கொண்டுவந்த பணம் தொலைந்து விட்டதாக தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மூதாட்டி ஒருவர் கண்ணீர் விட்டு கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும் தங்கியிருக்கும்போது நடைபயிற்சிக்கு சென்று அந்தப்பகுதி மக்களை சந்தித்து திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதை அவர் வழக்கமாக கடைபிடித்து வருகிறார். அந்தவகையில் அங்குள்ள விடுதியில் தங்கியிருக்கும் அவர் இன்று காலை நடைபயிற்சிக்கு செல்லும் வழியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தவாறு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு காய்கறிச் சந்தைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வரிடம் ஓடிவந்த மூதாட்டி ஒருவர், தான் காய்கறி வாங்குவதற்காக 1,500 ரூபாய் பணம் கொண்டு வந்ததாகவும், அதை தொலைத்துவிட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
அதைக்கண்டதும் முதல்வர் ஸ்டாலின் அவரை ஆறுதல்படுத்தினார். அருகிலிருந்த கனிமொழி அவரை கட்டியணைத்து சமாதானப்படுத்தினார். அதன்பின்னர் திமுக சார்பில் அவருக்கு 2,000 ரூபாய் பணம் உடனடியாக வழங்கப்பட்டது. அதற்கு மூதாட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.