துணை மேயரே போராட்டத்துக்கு தலைமை ஏற்பதா? - திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: துணை மேயராக இருந்துகொண்டு, போராட்டத்துக்கு தலைமை ஏற்பதா எனக் கேள்வி எழுப்பி திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் இன்று மாமன்ற கூட்டம் நடந்தது. துணை மேயர் பால சுப்பிரமணியம் மற்றும் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மன்றத்தில் பேசிய கவுன்சிலர் கவிதா விஜயகுமார், “7வது வார்டில் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி துணை மேயர் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக கவுன்சிலர்களுக்கு அலைபேசியில் கூட, அவர் தகவல் சொல்லவில்லை.

மாநகராட்சி நிர்வாக அமைப்பில் இருப்பவர்கள், எந்தவொரு தகவலும் சொல்லாமல் போராட்டத்தை முன்னெடுத்து நடத்து கிறார்கள். மண்டல அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இதனை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்” என அறிவித்தார். இதே கருத்தை அதிமுக உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்களும் தெரிவித்த நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் சேகர் தலைமையில் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துணை மேயர் பாலசுப்பிரமணியம் பேசும்போது, “வார்டுக்கு மக்கள் அழைத்ததால், சென்றேன்” என்றார். இதையடுத்து அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் எழுந்தது. மேயர் ந.தினேஷ்குமார் பேசும்போது “பராபட்சமின்றி வார்டு பணிகள் நடக்கிறது. இனி வரும் காலங்களில் வார்டுக்கு வரும்போது, உரிய தகவல் அளிக்கப்படும்” என்றார். இதில் அதிருப்தி அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் மொத்தமாக வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

மன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் பாலசுப்பிரமணியம், வார்டுகளில் பணிகள் நடைபெறவில்லை என போராட்டத்துக்கு தலைமை தாங்கினால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை கிடைக்கும்? திருப்பூர் மாநகரில் நடக்கும் பணிகள் குறித்து, திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான கே.என்.விஜயகுமாரை வைத்து, நாங்கள் இனி ஆய்வுப் பணி மேற்கொள்வோம். இதேநிலை நீடித்தால் விரைவில் அனைத்து அதிமுக கவுன்சிலர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றனர்.

பத்திரிகையாளர்கள் அதிருப்தி: முன்னதாக, திருப்பூர் மாநகராட்சியில் பல ஆண்டுகாலமாக நடந்து வரும் மாநகராட்சி கூட்டங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு கவுன்சிலர்கள் இருக்கை ஓரமாக ஒரு பகுதியில் இருக்கைகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று திடீரென பார்வையாளர்கள் பகுதியில் கம்பி போடப்பட்டு, தனி அறையில் பத்திரிகையாளர்கள் என்று பதாகை வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில், புகைப்பிடிக்காதீர் என்றும் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த பத்திரிகையாளர்கள் மேயரிடம் முறையிட்டனர்.

அதற்கு, அதிகாரிகள் அதிகளவில் பங்கேற்பதால் போதிய இடவசதி இல்லாததால் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், பார்வையாளர்கள் தான் இடம்பிடித்து அமர்ந்துள்ளனர் என்பதை தெரிவித்தபோதும், புகைப்பிடித்துவிட்டு பலர் அரங்க கூட்டத்துக்குள் வருவதால், பெண் கவுன்சிலர்கள் கோரிக்கைக்கு ஏற்ப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்.

அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கும் மாமன்ற கூட்டத்தில், பத்திரிகையாளர்களை அதிருப்தி அடையவைத்தது. தனி அறையில் அமர வைப்பதால், உடனடியாக செய்தி மற்றும் வீடியோ அரங்கக் கூட்டத்துக்கு வந்து எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இனி வரும் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் பட்டியலின்படி அனுமதி கடிதம் பெற வேண்டும் என மேயர் ந.தினேஷ்குமார் தெரிவித்தார்.

எந்த மாநகராட்சியிலும் இப்படியொரு நடைமுறை இல்லை என பத்திரிகையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அரங்கக் கூட்டத்துக்குள்ளே பின்பக்கமாக பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE