முடிவுக்கு வந்த வனத்துறை - அறநிலையத் துறை மோதல்: புத்தம் புதிய அழகர் கோயில் மலைச்சாலை திறப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: வனத்துறை - இந்து அறநிலையத் துறை மோதல் முடிவுக்கு வந்த நிலையில், ரூ.9 கோடியில் புதிதாக போடப்பட்ட அழகர்கோயில் மலைச்சாலை இன்று பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, 10 ஆண்டு சிரமத்திற்கு பிறகு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் உற்சாகத்துடன் மலைச்சாலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரை அருகே அழகர்கோயிலில் அழகர் மலை அடிவாரத்தில் சித்திரைத் திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இக்கோயில், சுற்றிலும் அடர்ந்த வனப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளதோடு, குளிர்ந்த தட்வெட்பமும், இதமான தென்றல் காற்றும் வீசுவதால், சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் விரும்பி அழகர்கோயில் வந்து செல்கிறார்கள். தற்போது தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் அழகர்கோயில் திகழ்கிறது.

அழகர்கோயில் அழகர் மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பகுதியில் 3 கி.மீ., தொலைவில் முருகனின் அறுபடை வீடுகளில் 6-ம் படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பழமுதிர் சோலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராக்காயி அம்மன் நூபுர கங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து அழகர்கோயில் வரையிலான 80 சதவீதம் சாலை புதிதாக போடப்பட்ட நிலையில், அழகர்கோயில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைச்சாலை முற்றிலும் சிதிமலடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக வளைந்து நெளிந்து செல்லும் இந்தச் சாலை, முற்றிலும் குண்டும், குழியுமாகவும், மண் சாலையாகவும், கற்கள் பெயர்ந்த சாலையாகவும் இருந்தது. இதனால் அடிவாரத்தில் மலைப்பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதியுற்றனர். கிட்டத்தட்ட 10 ஆண்டு கால அவஸ்தை இது. இந்து அறநிலையத் துறை சார்பில், அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.15, கார்கள், மற்ற வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

ஆனால், பயணிக்க ஏற்ற தக்க வகையில் மலைச்சாலை இல்லாததால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்தனர். இதனாலேயே மலைக்கோயில் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. மலைச்சாலை செல்லும் பகுதி, கடந்த காலத்தில் முற்றிலும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு, திருத்தியமைக்கப்பட்ட வனத்துறை சட்டப்படி, அழகர் மலை, வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனால், அழகர் கோயில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைச்சாலையை புதிதாக அறநிலையத்துறை போடுவதற்கு வனத்துறை முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

அதையும், மீறி தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ரூ.9 கோடியே 10 லட்சம் மதிப்பில் அழகர் கோயில் மலைச்சாலையை 4 கி.மீ தொலைவிற்கு புதிதாக போடுவதற்கு டெண்டர் விட்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கியது. ஆனால், வனத்துறை, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியது. இதனால், இந்து அறநிலையத்துறையும், வனத்துறையும் இடையே இந்த சாலை அமைக்கும் பணியில் மோதல் ஏற்பட்டது.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேரடியாக தலையீட்டு தமிழக அரசிடம் பேசி, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அழகர் கோயில் மலைச்சாலையை போடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத் துறை - வனத்துறை மோதல் முடிவுக்கு வந்து அழகர் கோயில் மலைச்சாலை புதிதாக போடப்பட்டுள்ளது.

பள்ளத்தாக்குகள் உள்ள பகுதியிலும், வளைவுப் பகுதியிலும் பாதுகாப்பான தடுப்பு கம்பிகள் அமைத்து புதிய மலைச் சாலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைச்சாலை, சில நொடிகளிலே மலைக்கோயில் செல்லும் அளவுக்கு விசாலமாகவும், தரமாகவும் அமைக்கப் பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இப்போது குதூகலமாகவும், உற்சாகத்துடனும் மலைச் சாலையில் பயணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE