சர்வ சேவா கட்டிடம் இடிப்பு: வாராணசி சத்தியா கிரகப் போராட்டத்தில் பங்கேற்பதாக சிதம்பரம் காந்தி மன்றம் அறிவிப்பு

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி மன்றம் உறுப்பினர்கள் வாராணசி சென்று 100 நாள் சத்தியா கிரகப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சிதம்பரம் காந்தி மன்றம் அறிவித்துள்ளது.

இது குறித்து சிதம்பரம் காந்தி மன்றத் தலைவர் மு.ஞானம் கூறுகையில்,"உத்தரப் பிரதேசம் மாநிலம் வாராணசியில் 1948ம் ஆண்டு ரயில்வே துறையிடம் இருந்து கிரயம் வாங்கிய இடத்தில் இயங்கி வந்த பழமை வாய்ந்த சர்வ சேவா சங்கக் கட்டிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடித்து அகற்றப்பட்டது. அந்த கட்டிடத்தில் இருந்த காந்திய புத்தகங்கள், அரிய பொக்கிஷங்கள் வெளியே வீசப்பட்டது. அந்த இடம் மீண்டும் ரயில்வேத் துறைக்கு வேண்டும் எனில், உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்கிவிட்டு கட்டிடத்தை அகற்றி இருக்கலாம்.

அதை விடுத்து நாட்டில் அமைதி நிலைத்திடவும், அறம் தழைத்திடவும், அனைவரும் அகிம்சை வழியில் நடக்க வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளும் சர்வ சேவா சங்கத்தின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் சங்க கட்டிடத்தையே இடித்து அகற்றியதற்கு சிதம்பரம் காந்தி மன்றத்தினரின் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மாற்று இடம் வேண்டி பல்வேறு அறவழிப் போராட்டங்கள் நடத்திய போதிலும் கடந்த ஓராண்டாக உத்தரப் பிரதேச அரசு சார்பில் எந்த வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

சிதம்பரம் காந்தி மன்றத் தலைவர் மு.ஞானம்

எனவே, அகில இந்திய காந்தியத் தலைவர்கள் இடிக்கப்பட்ட கட்டிடம் அருகே 100 நாள் சத்தியா கிரகப் போராட்டத்தை வினோபாஜி பிறந்த நாளான செம்டம்பர் 11ம் தேதி முதல் தொடங்க உள்ளனர். இந்த சத்தியா கிரகப் போராட்டத்திற்கு சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனில் சிதம்பரம் காந்தி மன்றம் உறுப்பினர்கள் வாராணசி சென்று 100 நாள் சத்தியா கிரகப் போராட்டத்தில் பங்கேற்பார்கள்” என்று ஞானம் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE