தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி... தயார் நிலையில் 330 மையங்கள்!

By சிவசங்கரி

2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்காக இலவச பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நடைப்பெறவுள்ளன.

நீட் தேர்வு

நாடு முழுவதும் பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு பொது தேர்வுகள் முடித்துள்ள மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுத தகுதி உடையவர்களாவர்.

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

தேர்வு நடைபெறுவதற்கு 40 நாட்களுக்கு முன்னதாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த நவம்பர்‌ மாதம் முதல்‌ பிப்ரவரி மாதம் வரை பள்ளி மாணவர்களுக்கு நீட்‌ தேர்வு மற்றும்‌ ஜேஇஇ தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில் நடத்தப்பட்டது.

இதன்‌ தொடர்ச்சியாக இன்று முதல்‌ மாவட்ட அளவில்‌ தேர்வு சார்ந்த பயிற்சிகள்‌, தேர்வுகள்‌ நடைபெற உள்ளன. அதன்படி, இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், ’திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் காலை 9.15 முதல் மாலை 4.30 வரை நீட் பயிற்சி வகுப்பு நடைபெறும். இதற்காக முன்னதாகவே தமிழகம் முழுவதும் விண்ணப்பித்த 13,304 பேர் பயிற்சி பெற உள்ளனர். தமிழகம் முழுவதும் 330 மையங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

பயிற்சி வகுப்புகளின்‌ போது மாணவ மாணவிகளுக்கு காலை உணவு, 8.30 மணி முதல்‌ 9 மணி வரை வழங்கப்படும்‌. தேநீர்‌ மற்றும்‌ மதிய உணவும் வழங்கப்படும்‌. மேலும்‌ பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத்‌ தொகை வழங்கப்படும்‌. ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும்‌ காலை 9.15 மணி முதல்‌ 10.45 மணி வரை திருப்புதலும்‌ அதைத்‌ தொடர்ந்து 11 மணி முதல்‌ 12.40 மணி வரை வாராந்திரத் தேர்வுகளும்‌ நடைபெறும்‌. மதிய உணவு இடைவெளிக்குப்பின்‌ பிற்பகலில்‌ கலந்துரையாடல்‌ மற்றும்‌ ஊக்கமளிப்பு அமர்வுகளும்‌ நடத்தப்படும். பயிற்சியின்‌ இறுதியில்‌ மொத்தம்‌ 3 திருப்புதல்‌ தேர்வுகள்‌ நடைபெறும்’ என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE