அதிமுகவுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்திவந்த நிலையில் ஒரே இரவில் பாஜக பக்கம் சென்றுவிட்டது பாமக. அரசியலில் தங்கள் நிலைப்பாட்டை சட்டென்று மாற்றிக்கொள்வது அக்கட்சிக்கு வழக்கமானது தான் என்றாலும் இந்தமுறை அந்தக்கட்சியின் முடிவால் யாருக்குப் பலன் என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரிதாக எழுந்துள்ளது.
யாருக்கு பயன் என்ற கேள்விக்கு முன்பாக, யாருக்கு ஏமாற்றம் மற்றும் இழப்பு என்பதை முக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது. இந்தமுறை பாமக கூட்டணி குறித்த விஷயங்களால் அதிமுக ரொம்பவே ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏனென்றால் பாமகவால் கடந்த தேர்தலில் அதிமுக ஓரளவுக்கு பலனடைந்திருக்கிறது என்றாலும் அதைவிட இழந்ததுதான் மிக அதிகம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் கொடுத்ததுதான் காரணம் என்பது அதிமுக பிற்பாடு உணர்ந்த உண்மை. அவசரப்பட்டு எடுத்த அந்த முடிவால் தான் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிற சமூகத்தினர் வாக்குகள் தங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்பதை தேர்தலுக்குப் பிறகு தான் எடப்பாடி பழனிசாமி உணர்ந்தார்.
வட மாவட்டங்களில் பாமகவுக்கு நிகராக அதிமுகவுக்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது. பாமக தங்கள் பக்கம் இருந்தால் வடமாவட்டங்கள் மட்டுமல்லாது கொங்கு பெல்ட்டை ஒட்டிய வடமேற்கு மாவட்டங்களிலும் வெற்றிபெற முடியும் என்ற திட்டத்தில் பாமகவை விடாமல் துரத்தியது அதிமுக. 7+1 என்ற கணக்கில் மாநிலங்களவை சீட் உட்பட சலுகைகளை அளிப்பதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அதற்காக ஆரம்பம் முதலே பாமகவை விட்டுவிடாமல் எல்லா வகையிலும் அவர்களுடன் நெருங்கியும், விட்டுக்கொடுத்தும் பேச்சுவார்த்தை நடத்தியது அதிமுக. ஆனால், இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு பாஜக பக்கம் பாமக சென்றதால் ரொம்பவே வெறுத்துப் போயுள்ளது அதிமுக. “அதனால் பரவாயில்லை, நாங்கள் மக்களை நம்பித்தான் இருக்கிறோம்” என்று விரக்தியுடன் பழனிசாமி சொன்னதையும், ”அவர்களது குடும்பத்தையும், பணத்தையும்தான் பாமக பார்க்கிறது” என்று சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் விமர்சித்ததில் இருந்தும் அதிமுகவின் ஏமாற்றத்தை உணரமுடியும்.
அதேசமயம், பாஜக - பாமக கூட்டணியால் யாருக்கு லாபம் என்று பார்த்தால் பாமகவுக்கு முதல் லாபம். தொடர் தோல்விகளால் மாம்பழம் சின்னத்தை இழந்துள்ள அக்கட்சிக்கு பாஜகவுடன் கூட்டணி அறிவித்த மறுநாளே சின்னம் கிடைத்தது. அது உடனடி லாபம். கிடைத்துள்ள சின்னத்தை தக்கவைப்பதற்கும் இந்த கூட்டணியால் கிடைக்கும் வாக்குகள் உதவலாம்.
பத்து தொகுதியிலும் தலா ஒரு சதவீதம் வாக்கு வாங்கினால்கூட மாம்பழம் சின்னத்தை தக்கவைக்க முடியும். இதெல்லாம் பயனாக இருந்தாலும் பாமகவுக்கான வெற்றிவாய்ப்பு என்பது கேள்விக்குறி தான். அக்கட்சி வலுவாக இருக்கும் வட மாவட்டங்களில், ஒப்பீட்டளவில் பாஜகவுக்கு பலம் குறைவாக இருப்பதால் அதைவைத்து நாம் எப்படி வெற்றிபெற முடியும் என்று பாமகவுக்குள் கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு தற்போதைய வெற்றியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், நீண்ட கால செயல்திட்டத்தையும் முன்னிறுத்தியே இந்த முடிவை எடுத்திருப்பதாக கட்சியினரிடம் விளக்கியிருக்கிறார் அன்புமணி.
நடிகர் விஜய் 2026-ல் நேரடி அரசியலுக்கு வருவதால், அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படலாம். அப்போது கூட்டணி ஆட்சிக்கான களம் உருவாகும். 2026 மற்றும் 2031-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல்திட்டமாகத்தான் பாஜகவுடன் இப்போது கூட்டணி வைத்திருப்பதாக அண்புமணி கூறியதாகச் சொல்கிறார்கள். தான் நினைக்கும் அத்தகைய சூழல் உருவானால் பாமக தனித்து ஆட்சி அமைக்காவிட்டாலும், கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பாவது உருவாகும் என்று அவர் நம்புகிறாராம்.
ஒருவிதத்தில் பார்த்தால் பாமகவின் வருகை பாஜகவுக்கும் பயன் தான். மிகுந்த பயனை பாஜக பெருமே தவிர அக்கட்சி இழப்பதற்கு ஏதுமில்லை. இந்த தேர்தலில் வெற்றி என்பதைத் தாண்டி தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. அதற்கு பாமகவின் பலம் உதவும். தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்ற கவலையில் இருக்கும் பாஜகவுக்கு ஆறுதல் தரும் வகையில் பாமகவால் வட மாவட்டங்களில் வாக்கு சதவீதம் உயரலாம்.
வட மாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் பாமகவின் வாக்குகள் கிடைக்கலாம் என்பது பாஜகவுக்கான பயன். ஆனால், எதிர்காலத்தில் குறிப்பாக, அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் வாக்கு வங்கியையும் சேர்த்து தன்னுடையதாகக் காட்ட பாஜக முயலும். அதன் மூலம், இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிட்டோம் எனக் கூறி திராவிடக் கட்சிகளை பாஜக மிரட்டும் சூழலும் உருவாகலாம்.
இன்னொரு பக்கம் பாஜக - பாமக கூட்டணியால் திமுக கூட்டணிக்கும் லாபம் தான். அதிமுகவுடன் பாமக சேர்ந்திருந்தால் வடமாவட்டங்களில் திமுகவுக்கு சவாலாகி இருக்கும். ஆனால் தற்போது அதிமுக கிட்டத்தட்ட தனித்தே களம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வடமாவட்டங்களில் வாக்கு பிரிவுக்கு வழிவகுக்கும். இதனால் அங்கெல்லாம் தங்கள் கூட்டணிக்கு உரிய வாக்குகள் மட்டுமே கிடைத்தாலே வெற்றி எளிதாகிவிடும் என்பதால் திமுக கூட்டணிக்கும் இதனால் பயன்தான்.
பாஜக கூட்டணிக்கு பாமக சென்றுவிட்டதால் லாபம் பெற்ற கட்சிகளில் தேமுதிகவும் ஒன்று. அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் மூன்று இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக கூறியிருந்த நிலையில் பாமக திடீரென கழட்டிக்கொண்டு போய்விட்டதால் தேமுதிக கேட்ட 5 தொகுதிகளையும் கொடுத்து, ராஜ்யசபா சீட்டும் தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறது அதிமுக.
இப்படி தேமுதிகவுக்கு கேட்டதெல்லாம் கிடைக்க பாமகவின் திடீர் இடப்பெயர்வுதான் காரணம். பாஜகவுடனான கூட்டணி குறித்து பாமக தரப்பில் பேசினோம். "நாட்டின் நலன் கருதியும், கட்சியின் எதிர்காலம் கருதியுமே பாஜகவுடன் இணைந்தோம் என்பதை எங்கள் தலைவர் தெளிவாக கூறியிருக்கிறார். அதைத்தாண்டி இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி பெரும் வெற்றிபெற்று மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். அதற்கு நாங்களும் தோள்கொடுத்ததாக இருக்கட்டுமே” என்கிறார்கள்.
ஒரு காலத்தில், தமிழ்நாட்டில் ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய கட்சியாக இருந்த பாமக, தற்போது இரண்டாம் இடத்தை தீர்மானிக்க உதவும் கட்சியாக மாறி இருக்கிறதா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்!