சென்னை: வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வங்கி சேவையை வழங்க வேண்டும். இல்லையென்றால், வங்கிகள் தங்களது வியாபாரத்தை இழக்க நேரிடும் என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கூறினார்.
அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதல் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சேகரன் அறிமுக உரை ஆற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: “இந்தியன் வங்கியுடன் சில வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது. வங்கிகள் இணைப்புக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, உறுப்பினர்களின் சலுகைகள், பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சில சவால்கள் உள்ளன.
வங்கிப் பரிவர்த்தனைகள் மின்னணுமயமாக்கப்பட்ட பிறகும் கூட வேலைப் பளு குறையவில்லை. விடுமுறை நாட்களில் கூட அதிகாரிகள் பணி செய்ய வேண்டி நிலை உள்ளது. இதனால், அதிகாரிகள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கு சரியான பணிசூழல் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்கள் மட்டுமின்றி, அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் வளர்ச்சி அடையும். அரசு கொண்டு வரும் சீர்த்திருத்தங்களுக்கு சங்கம் ஒரு போதும் எதிராக இருக்காது. மாறாக, சிறந்த நிர்வாகம், பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்துதல் ஆகிய சீர்த்திருத்தங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்தவும், தனியார்மயமாக்களை தடுத்து நிறுத்தவும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்’’ என்றார்.
இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்திலால் ஜெயின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:“அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆற்றி வரும் சிறப்பான பணி காரணமாக, இந்தியன் வங்கி ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த2020-21ம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடியும், 2021-22ம் ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி என படிப்படியாக லாபம் அதிகரித்து ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,400 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
» புழல் சிறையில் இரு நைஜீரிய பெண் கைதிகள் இடையே மோதல்
» பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் கூடி மகிழ்ந்த காவல்துறையினர்
சிறுசேமிப்பு டெபாசிட் வளர்ச்சியில் இந்தியன் வங்கி முதல் இடத்தில் உள்ளது. இதற்காக, நமது வங்கியில் பணிபுரியும் 40 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கித் துறையில் இன்றைக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மொபைல் போன் மூலம் உள்ளங்கையில் வங்கி சேவையை பெற முடியும். மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும், தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வங்கி சேவையை வழங்க வேண்டும். இல்லையென்றால், வங்கிகள் தங்களது வியாபாரத்தை இழக்க நேரிடும்.
இன்றைக்கு வங்கிகளின் டெபாசிட்டுகளின் வளர்ச்சி குறைந்து வருகிறது. காரணம், இன்றைக்கு உள்ள புதிய தலைமுறையினர் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தைகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு நல்ல லாபம் கிடைப்பதே இதற்குக் காரணம். எனவே, இத்தகைய சவால்களை சமாளிக்க வேண்டும். இதே போல், கடன் சந்தையிலும் ஏராளமான சவால்கள் உள்ளன.
வங்கி சேவைகள் இன்றைக்கு அனைத்தும் மின்னணு மயமாக்கப்பட்டு விட்டது. அதே சமயம், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சவால்களை சமாளிக்க வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், மொபைல் வங்கி சேவையை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும்.
ஊதிய உயர்வு தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு 17சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதே போல், ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாங்கள் எடுத்துள்ள காப்பீடுகளுக்கு அதிக பணம் பிரீமியமாக செலுத்த வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வழங்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரூபம் ராய், இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர்கள் அஷுதோஷ் சவுத்ரி, மகேஷ் குமார் பஜாஜ், சிவ் பஜ்ரங் சிங், பிரஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.