முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் தற்கொலை படையாக மாறுவோம்: போராட்டத்தில் விவசாயிகள் ஆவேசம் 

By என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் தற்கொலைப் படையாக மாறி தடுத்து நிறுத்துவோம் என லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கடந்த 2006 மற்றும் 2014 ல் உச்சநீதிமன்றம், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம், பின்பு பேபி அணையை பலப்படுத்திவிட்டு, படிப்படியாக152 அடிவரை தண்ணீரை உயர்த்தலாம் என தீர்ப்பளித்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக, பெரியாறு அணையில் மராமத்து பணிகளுக்கு கேரளத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் பேபி அணையை பலப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரான டீன் குரியாகோஸ் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், அக்டோபர் 1-ம் தேதி முதல், பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேபிஅணையை பலப்படுத்தக்கோரியும், பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்ய பரிந்துரை செய்த மத்திய நீர்வள ஆணையத்தை கண்டித்தும், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் தமிழக எல்லையான குமுளியில் முற்றுகைப்போராட்டம் நடத்துவதற்காக இன்று லோயர்கேம்ப்புக்கு விவசாயிகள் வந்தனர். அங்கிருந்து அணையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே உத்தமபாளையம் டிஎஸ்பி செங்கோட்டு வேலவன் தலைமையில், ஆய்வாளர்கள் வனிதாமணி, செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் மணிமண்டபம் அருகே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கேரள அரசு, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும், மத்திய நீர்வள ஆணையம் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. பேபி அணையை பலப்படுத்திய பிறகுதான் அணையை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த அணையை நம்பி ஐந்து மாவட்டத்தில் 10 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 ஆண்டுகளாகியும் அணையை பலப்படுத்த முடியவில்லை. இந்த நெருக்கடியில் பழைய அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது என்பது இந்திய ஒருமைப் பாட்டின் மீது கை வைப்பதற்கு சமம். பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் தற்கொலைப் படையாக மாறி அதை தடுத்து நிறுத்துவோம். நாட்டை, ஒருமைப்பாட்டை நேசித்து ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்களை மாற்றி விடாதீர்கள்.'' இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்பாட்டத்தில் விவசாய சங்க வழிகாட்டுகுழு தலைவர் சலேத்து, தலைவர் பொன்காட்சிக்கண்ணன், துணைத் தலைவர் ராஜீவ், தமிழ்நாடு நிலவணிகர் நலசங்க மாநில துணைத் தலைவர் மனோகரன் மற்றும் உசிலை நேதாஜி மற்றும் பார்வர்டு பிளாக், இந்து எழுச்சி முன்னணி, முல்லைச்சாரல் விவசாய சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE